புத்தளம் மன்னார் வீதியில் அமைந்திருக்கின்ற மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த நவராத்திரி திருவிழா நிகழ்வுகள் வியாழக்கிழமை (03) ஆரம்பிக்கப்பட்டன.
இந்த திருவிழாவையொட்டி தொன்று தொட்டு, முதல் நாள் உபயத்தை வழங்கி வருகின்ற புத்தளம் நடராஜ தேவர் குடும்பத்தினர் அவர்களது புத்தளம் பிரதான வீதியில் அமைந்திருக்கும் முன்னாள் வியாபார நிலையத்திலிருந்து ஸ்ரீ முத்து மாரியம்மனுக்கு பட்டு சாத்தும் பொருட்டு சீர்தட்டு கொண்டு செல்லும் நிகழ்வு வியாழக்கிழமை (03) காலை இடம்பெற்றது.
ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்துக்கு செல்கின்ற வழியில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்துக்கும் சென்ற பக்தர்கள் அங்கு ஸ்ரீ சித்தி விநாயகரையும் வழிபட்டு விட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தை செனறடைந்தனர்.
ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் அதன் பிரதம குரு சிவஸ்ரீ வெங்கட சுந்தாராம குருக்கள் தலைமையில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
இதனையடுத்து ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் அதன் பிரதம குரு அம்பலவாணன் குருக்கள் தலைமையில் நவராத்திரி திருவிழாவின் முதல் நாள் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)