2024 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் நடந்த முதல் அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணியை, தென்னாப்பிரிக்க மகளிர் அணி வீழ்த்தி கிரிக்கெட் உலகை மிரள வைத்தது. கடைசி மூன்று முறையும் ஆஸ்திரேலியா மகளிர் அணி தான் மகளிர் டி20 உலக கோப்பையை வென்றது.
ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் பெத் மூனி 42 பந்துகளில் 44 ரன்களும், டகிலா மெக்கிராத் 33 பந்துகளில் 27 ரன்களும், எலிஸ் பெர்ரி 23 பந்துகளில் 31 ரன்களும், போப் லிட்ச்ஃபீல்டு 9 பந்துகளில் 16 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது.
அடுத்து தென்னாப்பிரிக்கா அணி சேசிங் செய்தது. அந்த அணி 135 ரன்கள் என்ற இலக்கை எட்டுவது சிரமம் என்று பலரும் எண்ணினர். ஆனால், துவக்க வீராங்கனை லாரா உல்வார்ட் நிலையாக நின்று ஆடினார். மற்றொரு துவக்க வீராங்கனை டாஸ்மின் பிரிட்ஸ் 15 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மூன்றாம் வரிசையில் இறங்கிய ஆனேக் போஸ்ஷ் அதிரடி ஆட்டம் ஆடினார். அவர் 48 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். கேப்டன் லாரா உல்வார்ட் 37 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து 15வது ஓவரில் ஆட்டம் இழந்தார்.
தென்னாப்பிரிக்க அணி 17.2 ஓவர்களில் 135 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.