உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான தகவல்களை முன்வைப்பதற்காக அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன உயர்நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
புலனாய்வுத் தகவல் கிடைத்தும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த தாக்குதலை தடுக்க தவறியதன் மூலம் அடிப்படை மனித உரிமைகளை அவர் மீறியுள்ளார் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், 75 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் அவர் நட்ட ஈட்டை முழுமையாகச் செலுத்தத் தவறியதால், நீதிமன்ற உத்தரவின்படி அவருக்கு எதிராக சட்டமா அதிபர் நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டைத் தாக்கல் செய்தார்.
அது தொடர்பான உண்மைகளை முன்வைப்பதற்காக இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் முன்னர் விடுத்த அறிவித்தலுக்கு அமைய நிலந்த ஜயவர்தன நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துவதோடு, மீண்டும் அவ்வாறானதொரு அழிவுக்கு நாட்டுக்குள் இடமளிக்காத வகையில், பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியும் நியாயமும் நிலை நிலைநாட்டப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.