உலகத்தை நடுங்க வைக்கும் அணு ஆயுத அச்சம்: ரஷ்யா-உக்ரைன் போரின் புதிய பரிமாணம் குறித்து தமிமுன் அன்சாரியின் எச்சரிக்கை

Date:

ரஷ்யா – உக்ரைன் போர் இரு தரப்புக்கும் வெற்றியை தராத நிலையில், அடுத்ததாக அணு ஆயுத போராக மாறுமோ என்ற பீதியை உருவாக்கியுள்ளதாக தமிழ்நாடு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவசர் மு.தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் முகப்புத்தகத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கா தலைமையிலான  NATO இராணுவ கூட்டணி நாடுகளுக்கும், ரஷ்யாவுக்குமான நீண்ட கால பகை கடந்த பெப்ரவரி 2002 ஆம் ஆண்டு உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போராக மாறியது .

முன்பு ரஷ்யாவையும் உள்ளடக்கிய சோவியத் யூனியனின் தலைமையில் வார்சா ((WARSA)) இராணுவ கூட்டணி இருந்தபோது கூட, பனிப்போர் மட்டுமே நிலவியது.

ஆனால் இப்போது நேரடி சண்டை நடைபெற்று வருகிறது. சோவியத் யூனியனின் சக்தி வாய்ந்த உளவு அமைப்பான KGPன் தலைமைப் பொறுப்பில் இருந்த விளாடிமிர் புடின் தற்போது ரஷ்ய அதிபராக உள்ள நிலையில், ரஷ்ய நாடு பழைய சோவியத் யூனியனின் ராணுவ அந்தஸ்தோடு பயணிக்கிறது.

இப்போர் தொடங்கி ஆயிரம் நாட்களை கடந்துள்ள நிலையில், இருதரப்பிலும் இதுவரை சுமார் 25,000-த்திற்கும் அதிகமானோர் உயிர் இழந்திருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.

தற்போது இந்த யுத்தம் இரு தரப்புக்கும் வெற்றியை தராத நிலையில், அடுத்ததாக அணு ஆயுத போராக மாறுமோ என்ற பீதியை உருவாக்கி இருக்கிறது.

தொலைதூரப் பகுதிகளில் தாக்குதலை நடத்தும் திறன் உள்ள அமெரிக்க தயாரிப்பு ‘அட்டாக்காம்ஸ்’ பாலிஸ்டிக்ஸ் ஏவுகணைகளை ரஷ்யாவுக்கு எதிராக பயன்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அனுமதித்துள்ளது பதற்றத்தை தூண்டி இருக்கிறது.

இத்தகைய 6 ஏவுகணைகளை ரஷ்யா மீது உக்ரைன் தாக்கியதாக கூறப்படும் நிலையில், தற்காப்பு நிமித்தமாக தனது திருத்தப்பட்ட அணு ஆயுதக் கொள்கையை ரஷ்ய அதிபர் புடின் நேற்று வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கா போன்ற அணு ஆயுத நாட்டின் உதவியுடன், எந்த ஒரு நாடும் ரஷ்யாவின் மீது எந்த வகை ஆயுதங்களை கொண்டு தாக்கினாலும் அந்நாட்டுக்கு எதிராக அணு ஆயுதங்களின் மூலம் பதிலடி கொடுப்போம் என அவர் அறிவித்துள்ளார்.

உலகிலேயே மிக மோசமான பாதிப்புகளை தரக்கூடிய அணு ஆயுதங்கள் ரஷ்யாவில் உள்ள நிலையில், இந்த அறிவிப்பு விவரிக்க முடியாத பேரழிவை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

கச்சா எண்ணெய் விலை ஏற்றம், தங்கத்தின் மீதான ஏற்ற – இறக்க விலைகள், பன்னாட்டு ஏற்றுமதி – இறக்குமதி வணிகம் இவற்றையெல்லாம் கடந்து விவரிக்க முடியாத மனித பேரழிவுகளும், மீட்க முடியாத சுற்றுச்சூழல் சேதங்களும் ஏற்படும் என்பதை உலகம் புரிந்திருக்கிறது.

பதவி நிறைவடையும் காலத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட பொறுப்பற்ற ஒரு அறிவிப்பு, ரஷ்யாவின் கோபத்தை கிளறி விட்டு இருக்கிறது.

இது ஐரோப்பாவோடு முடிந்து விடக்கூடிய பிரச்சனை அல்ல. உலகெங்கிலும் ஏற்படக்கூடிய பேரழிவு குறித்த முன்னெச்சரிக்கை செய்தியாகும்.

ஏற்கனவே பலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் போரினால் மூன்றாவது உலக யுத்தம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் உலகம் உள்ள நிலையில், உக்ரேனுக்கும் -ரஷ்யாவுக்கும் இடையிலான இந்த புதிய பதற்றம் உலகின் நான்கு திசைகளையும் நடுங்க வைத்திருக்கிறது.

சச்சரவுகளும், சண்டைகளும் இல்லாத உலகம் என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்பது உண்மைதான்.

ஆயினும் அனைவரையும் மரணிக்கச் செய்து உலகை சுடுகாடாக மாற்றக்கூடிய முயற்சிகளை தடுத்து நிறுத்துவதற்கான சாத்தியங்கள் ஏராளமாக இருக்கின்றன. சர்வதேச அமைதி விரும்பிகள் உடனடியாக களத்தில் இறங்க வேண்டிய நேரம் இது என அவர் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 

 

 

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...