அனுராதபுரம் மாவட்டத்தில் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் கல்வி, பொருளாதாரம், அரசியலில் உள்ளிட்ட சகல விவகாரங்களையும் விளைதிறன் மிக்க வகையில் ஒருங்கிணைத்து வழி நடத்துவதற்கான வலுவான சிவில் சமூக அமைப்பு ஒன்றின் தேவையை நடந்து முடிந்த பாராளுமன்ற பொது தேர்தல் முடிவுகள் வலியுறுத்துகின்றன.
அனுராதபுரம் மாவட்ட முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரை கிட்டத்தட்ட அனைத்து வாக்காளர்களும் ஒன்று திரண்டு குறிப்பிட்ட ஒரு வேட்பாளரை ஆதரிப்பதன் மூலம் மட்டுமே தமக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு உருவாக முடியும். கடந்த இரண்டு பொதுத் தேர்தலிலும் மாவட்ட முஸ்லிம் சமூகம் அதனை நிரூபித்துக் காட்டியிருந்தது.
சுதந்திர இலங்கையில் அனுராதபுரம் மாவட்ட முஸ்லிம் சமூகத்தினால் தமக்கானதொரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இது வரை பெற்றுக்கொள்ள முடியவில்லையே என்ற நீண்டகால ஏக்கமும், கனவும், தாகமும் கடந்த 2015 ஆம் ஆண்டின் எட்டாவது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் நனவாக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டின் ஒன்பதாவது பாராளுமன்ற தேர்தலிலும் எமது பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டது.
ஆனால் 2024 ஆம் ஆண்டின் பத்தாவது பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தனக்கான முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை அனுராதபுர மாவட்ட முஸ்லிம் சமூகம் இழந்து தவிப்பதை முகநூல் மற்றும் வட்சப் குழுமங்களில் வெளிப்படும் பதிவுகளுக்கூடாக அவதானிக்க முடிகிறது.
சில அவதானங்கள்
* முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இஷாக் ரஹ்மான், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான கூட்டணியின் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டமை அவரது தோல்வியில் பெரிதும் செல்வாக்கு செலுத்தி இருக்கிறது. ஐக்கிய மக்கள் சக்தியில் தனக்கான இருப்பிடத்தை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்வதற்கான அரசியல் வியூகத்தை அவர் வகுத்திருக்க வேண்டும்.
இஷாக் ரஹ்மான் அவர்கள் சில வேளை ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டிருந்தால் பெரும்பாலும் இந்த தேர்தலில் வெற்றிவாகை சூடி இருக்கலாம். ரணில் விக்ரமசிங்க அவர்களையும் அவர் தலைமை தாங்கும் கட்சிகளையும் மக்கள் வெறுத்து ஒதுக்கி இருக்கும் நிலையில், அந்தக் கட்சியில் போட்டியிட அவர் எடுத்த தீர்மானம் தோல்வியில் முடிவடைந்திருக்கிறது.
* நடைபெற்று முடிந்த பத்தாவது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தலில் அனுராதபுரம் மாவட்ட முஸ்லிம் சமூகம் சார்பாக மூன்று வேறு கட்சிகளில் நான்கு வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டவை நமது வாக்குகள் சிதறிப் போவதற்கான பிரதான காரணியாக அமைந்திருந்தது. இதன் மூலம் கடந்த இரண்டு பொதுத் தேர்தலிலும் கட்டிக் காத்து வந்த நமது பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இந்தத் தேர்தலில் தவிடுபொடியாகிருக்கிறது.
* இம்முறை இடம் பெற்ற பொதுத் தேர்தல் கடந்த பொதுத் தேர்தல்களை விடவும் பல்வேறு விதத்திலும் வித்தியாசமானது.
கடந்த 76 ஆண்டுகளாக இலங்கையில் நிலவி வந்த சீரழிந்த அரசியல் கலாச்சாரம் மாற்றி அமைக்கப்பட வேண்டும், நாட்டை சூரையாடிய சுயநல அரசியல் கலாச்சாரம் புதைக்கப்பட வேண்டும், புதிய அரசியல் கலாச்சாரத்துக்கான பாதை செப்பனிடப்பட வேண்டும் போன்ற தேசிய மக்கள் சக்தியின் சுலோகங்களால் ஈர்க்கப்பட்ட மக்கள், கடந்த அரசாங்கங்களின் தோல்வியை மனதில் கொண்டு, இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் கெளரவ அனுரகுமார திசாநாயக்க அவர்களை ஆதரித்து ஜனாதிபதியாக்கினர்.
கெளரவ அனுரகுமார திசாநாயக்க அவர்களின் தேர்தல் வெற்றியோடு பேரலையாய் எழுந்து வந்த தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவு, வரப்போகும் பாராளுமன்ற பொது தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை உறுதி செய்யும் பலமான காரணியாக அமைந்தது. அன்னளவாக 115 – 130 இற்கும் இடைப்பட்ட பாராளுமன்ற ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பறும் என அரசியல் ஆய்வாளர்களும் அவதானிகளும் கனித்திருந்தனர். இந்நிலையில் அனுராதபுர மாவட்ட முஸ்லிம் சமூகம் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரிப்பதன் மூலம் ஆட்சி பீடம் ஏறப்போகும் அரசாங்கத்தில் தமக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தக்க வைப்பது குறித்து தீர்மானித்திருக்கலாம்.
மேற் சொன்ன காரணிகளின் பின்னணியில் அனுராதபுர மாவட்ட முஸ்லிம் சமூகத்தின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டதற்கான பிரதான காரணியாக நமது மாவட்ட முஸ்லிம் சமூகத்தின் விவகாரங்கள் தொடர்பில் கூட்டுத் தீர்மானம் நிறைவேற்றுவதற்கும் அவற்றை முறையாக அமுலாக்கம் செய்வதற்குமான வலுவான சிவில் சமூக அமைப்பு ஒன்று இல்லாமையாகும்
எனவே எதிர்காலத்தில் அனுராதபுர மாவட்ட முஸ்லிம் சமூகத்தின் புத்திஜீவிகள், தொழில் வல்லுனர்கள், துறை சார்ந்த நிபுணர்கள், உலமா பெருமக்கள், சமூக அரசியல் செயற்பாட்டாளர்கள், சக்தி மிக்க இளைஞர்கள் என சகல தரப்பினரையும் சகல பிரதேசங்களையும் உள்வாங்கியதான பலமான சிவில் சமூக அமைப்பு ஒன்றை தாபித்து, அதனை பலப்படுத்தி பாதுகாப்பதற்கான வழிவகைகள் குறித்து அனுராதபுர மாவட்ட முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பு மிக்க தலைமைகள் சிந்தித்து செயல்பட வேண்டும்.
மொஹமட் தெளபீக்
கலாநிதி கற்கை மாணவன்,
அரசியல் விஞ்ஞானத்துறை,
மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம்