அறுகம்பை பிரதேசத்திற்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கூறி இஸ்ரேல் தனது பிரஜைகளுக்குப் பிறப்பித்திருந்த பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.
அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு சபையால் அந்த எச்சரிக்கை அளவை நான்கில் இருந்து இரண்டாக குறைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அறுகம்பை பிரதேசத்தில் இஸ்ரேலியர்களை தாக்க திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வௌியாகியிருந்தன
இதனால் மறு அறிவித்தல் வரும் வரை அறுகம்பை பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு இஸ்ரேல் தனது குடிமக்களுக்கு கடந்த ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதேவேளை, அறுகம்பை மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் சர்பிங் விளையாட்டால் இஸ்ரேலியர்கள் அதிகம் உலாவுவதால் ஏதேனும் ஆபத்து ஏற்படலாம் என கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமக்கு தகவல் கிடைத்ததாக கடந்த 23 ஆம் திகதி பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்திருந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அண்மையில் அரசாங்கம் அறிவித்தது.