இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரான குமார் சங்கக்கார யாழ்ப்பாணத்தில் உள்ள வளர்ந்து வரும் திறமையான இளம் கிரிக்கெட் வீரர்கள் மூவருக்கு கிரிக்கெட் உபகரணங்களை அன்பளிப்பு செய்துள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் மற்றும் பங்களாதேஷுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறவுள்ள 17 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் தொடர் ஆகியவற்றில் பங்குபற்றவுள்ள இலங்கை கனிஷ்ட அணிகளில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று இளம் வீரர்கள் இடம்பெறுகின்றனர்.
கனிஷ்ட இலங்கை அணிகளில் ஒரே நேரத்தில் 3 யாழ். வீரர்கள் இடம்பெறுவது இதுவே முதல் தடடைவயாகும்.
இதன்படி, யாழ். மத்திய கல்லூரியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ரஞ்சித்குமார் நியூட்டன், யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியின் மாலிங்க பாணியில் பந்துவீசும் கே. மாதுளன் ஆகிய இருவரும் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியில் இடம்பெறுகின்றனர்.
பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி வீரர் வீ. ஆகாஷ் 17 வயதுக்குட்பட்ட பங்களாதேஷுடனான கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியில் பெயரிடப்பட்டுள்ளார்.
இந்த மூன்று வீரர்களும் தம்புள்ளை பிராந்திய அணியில் திறமையை வெளிப்படுத்தியதன் பலனாக இலங்கை கனிஷ்ட அணிகளில் இடம்பிடித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த மூன்று வீரர்களுக்கும் கிரிக்கெட் உபகரணங்களை இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரான குமார் சங்கக்கார அன்பளிப்பு செய்துள்ளார்.
தம்புள்ளை இளைஞர் தெரிவுக்குழு இணைப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ரஞ்சன் பரணவிதான விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க சங்கக்கார இந்த அன்பளிப்பைச் செய்துள்ளார். இது தொடர்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் ரஞ்சன் பரணவிதான பாராட்டு தெரிவித்துள்ளார்.
‘யாழ். மத்திய கல்லூரியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ரஞ்சித்குமார் நியூட்டன், யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரியின் வலது கை வேகப்பந்து வீச்சாளர் கே. மாதுளன், பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் வலது கை சுழல்பந்து வீச்சாளர் வீ. ஆகாஷ் ஆகியோர் சிறப்பாகச் செயற்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஆசியக் கிண்ணத்திற்கான 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியில் நியூட்டன் மற்றும் மாதுலன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் தேசிய இளைஞர் அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள் தெரிவு செய்யப்படுவது இதுவே முதல் தடவையாகும் – இது பிராந்தியத்திற்கான வரலாற்றுச் சாதனையாகும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, இளைஞர் அணிக்காக விளையாடிய பெருமையும் வியாஸ்காந்துக்கு கிடைத்தது, இது போன்ற சாதனைக்கு முன்னுதாரணமாக அமைந்தது.
மாகாண மட்டத்தில் தமது சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய தம்புள்ளை அணியிலிருந்து தேசிய மட்டத்தில் ஒரு இடத்தைப் பெறுவதற்கு இந்த திறமையான வீரர்கள் உண்மையிலேயே ஒரு உத்வேகமாக உள்ளனர்.
எனது வேண்டுகோளுக்கு இணங்க சில வாரங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் உள்ள இந்த மூன்று இளம் திறமையாளர்களுக்கும், தம்புள்ளை அணியில் இடம்பிடித்த வீரர்களுக்கும் கிரிக்கெட் உபகரணங்களை வழங்கிய குமார் சங்கக்காரவுக்கு மனமார்ந்த நன்றிகள்.
உங்கள் ஆதரவு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது ரஞ்சன் பரணவிதான சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.