காலி முகத்திடலை மத வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக மாத்திரமின்றி ஏனைய நடவடிக்கைகளுக்கும் நிபந்தனைகளுடன் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று (06) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி இலங்கை துறைமுக முகாமைத்துவம் மற்றும் ஆலோசனை சேவைகள் பிரைவேட் லிமிடெட்டின் முகாமைத்துவம் மற்றும் நிர்வாகத்தின் கீழ் கட்டுப்படுத்தப்படும் காலி முகத்திடலை சமய நடவடிக்கைகள் அல்லாத ஏனைய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த அனுமதி இல்லை என்ற தீர்மானத்தை அமைச்சரவை நிறைவேற்றியது.
இந்நிலையில், தற்போதைய அரசாங்கம் காலி முகத்திடலில் சமூக நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.
காலி முகத்திடலை நிர்வகிப்பதற்கும் பராமரிப்பதற்கும் மாதாந்தம் 2.5 மில்லியன் முதல் 3 மில்லியன் ரூபாய் வரை செலவு செய்யப்படுவதாக விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.