சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சு, இலங்கைக்கான சவூதி தூதரகத்தினூடாக கடந்த வருடம் நடாத்திய அல்குர்ஆன் மனனப் போட்டிகளைப் போன்று இவ்வருடமும் பிரமாண்டமான முறையில் நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.
அதற்கமைய குறித்த போட்டியின் இரண்டாவது கட்டத்தை 2025 ஆம் ஆண்டில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஆரம்பிப்பதற்காக, சவூதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவர் உஸ்தாத் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்கள் நேற்று (05) முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
இந்த சந்திப்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மதப் பிரிவுக்கான உதவிப் பணிப்பாளர் என். நிலோபர், நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.எம். முப்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதிப் போட்டிக்கான தெரிவுகள் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.
சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சு, இலங்கைக்கான சவூதி அரேபியாவின் தூதரகத்தினூடாக மாபெரும் அல்குர்ஆன் மனனப் போட்டியொன்று கடந்த வருடம் கொழும்பிலுள்ள மூவின்பார்க் ஹோட்டலில் நடத்தப்பட்டது.
அதன் பரிசளிப்பு நிகழ்வு ஷங்ரிலா ஹோட்டலில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
குறித்த போட்டி வருடா வருடம் நடைபெற வேண்டும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், சவூதி அரேபியாவின் முஸ்லிம் விவகார அமைச்சிடம் உத்தியோகபூர்வமாக கேட்டுக் கொண்டது.
இதேவேளை அல் குர்ஆனை முழுமையாக மனனமிட்டு ஹாபிஸாகிய காத்தான்குடியைச் சேர்ந்த முக்பில் சினான் என்ற கண் பார்வையற்ற சிறுவனுக்கு சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்துக்கு வரவழைத்து பரிசுப் பொதிகளை வழங்கி கெளரவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.