தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் (‘FENGAL’) ஃபெஞ்சல் சூறாவளி நேற்றிரவு 11.30 மணியளவில் திருகோணமலைக்கு வடக்கே சுமார் 360 கி.மீ தொலைவிலும் காங்கேசந்துறைக்கு வடகிழக்கே 280 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டிருந்ததாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது மேற்கு திசை சார்ந்து, வடமேல் திசை நோக்கி நகர்ந்து இன்று (30) மாலை வட தமிழ்நாடு – புதுச்சேரி கடற்கரையை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இத்தொகுதியினால் இலங்கையின் வானிலையில் ஏற்படும் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.
வடமாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் வானம் மேக மூட்டத்துடன் தொடர்ந்தும் காணப்படும் என்பதோடு, அவ்வப்போது மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
வட மாகாணத்தில் சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிக ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 60 – 70 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என்பதோடு, மேல், வடமேல், வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, மத்திய, தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-55 கி.மீ. வரையான பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.