தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது தகுதியையும் திறமையையும் அரசியல் நுணுக்கத்தையும் கருத்தில் கொண்டே அமைச்சு பதவிகளை வழங்கியிருக்கிறது. மாற்றமாக இனத்தையோ மதத்தையோ பாலினத்தையோ கொண்டல்ல என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஸ்வி சாலிஹ் தெரிவித்துள்ளார்.
இம்முறை நியமிக்கப்பட்ட அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவர் இல்லாதமை தொடர்பில் எழுந்த சர்ச்சையை அடுத்தே ரிஸ்வி சாலி சமூக ஊடகத்தில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
உரிய அமைச்சுக்களுக்கு சரியான நபர்களையே ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நியமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எங்கள் அனைவரையும் விட திறமை மற்றும் பங்களிப்புகள் உள்ள ஒருவரினால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற இந்த தெரிவு தகுதியின் அடிப்படையிலே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத அடிப்படையில் நியமனம் வழங்கப்படுவது என்று கூறுவது நாடு ஒற்றுமையை நோக்கி நகர்கின்ற போது அதற்கு பாதகமாக எண்ணெய் வார்ப்பது போல அமையும்.
நாங்கள் தேசிய மக்கள் சக்தியை தெரிவு செய்தது அனைவருக்குமான சிறந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்கான தொலைநோக்கு இருப்பதனாலேயே. இன மத பேத வித்தியாசங்களை பாராது பிரிக்க நினைக்காமல் நாங்கள் அரசாங்கத்துக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.