இஸ்லாத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளை ஒத்திவைக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
குறித்த தீர்ப்பு நாளை நவம்பர் 14ஆம் திகதி வழங்குவதாக கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன கடந்த செப்டம்பர் 26 ஆம் திகதி அறிவித்திருந்தார்.
எனினும் நாளை 14 ஆம் திகதி தேர்தல் தினம் என்பதால், நீதிமன்ற நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே நாளைய தினம் 14 ஆம் திகதிக்குரிய வழக்குகளை பிறிதொரு தினத்துக்கு மாற்றி உயர் மற்றும் மேன் முறையீட்டு நீதிமன்றங்கள் அறிவித்தல் அனுப்பியுள்ள நிலையில் மேல் மற்றும் நீதிவான் நீதிமன்றங்களிலும் பெரும்பாலும் அதே நடைமுறை பின்பற்றப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. எனினும் அது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.
எனவே பெரும்பாலும் 14 ஆம் திகதி பதில் கடமைகளை முன்னெடுக்க பதில் நீதிவான் ஒருவரே கடமைகளில் இருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதால், ஞானசார தேரருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்னுமொரு தினத்துக்கு ஒத்தி வைக்கப்படலாம் என தெரிகின்றது.
‘இஸ்லாம் ஒரு புற்றுநோய்’ என ஞானசாரதேரர் வெளியிட்ட கருத்துக்கு எதிராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் பொரளை ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் ரிகாஸ் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் மேலதிக நீதிவான் (3 ஆம் இலக்க அறை) முன்னிலையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, முறைப்பாட்டாளர் தரப்பின் சாட்சியாளர் உள்ளிட்ட சாட்சியாளர்கள் நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், குறித்த வழக்கை சுமுகமாக முடித்துக்கொள்ளும் நோக்கில் தனது சேவை பெறுநர் நீதிமன்றில் பகிரங்க மன்னிப்பு கோர தயாராக இருப்பதாக ஞானசார தேரரின் சட்டத்தரணிகள் நீதிமன்றுக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
source:vidivelli