பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்கு சமூக ஊடகப் பயன்பாடுகளில் உள்ள அனைத்து தொலைதொடர்பு சாதனங்களை பயன்படுத்துவது தொடர்பாக கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு சிறப்பு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பாடசாலை கல்வி தொடர்பான சமூக ஊடகப் பயன்பாடுகளில் உள்ள அனைத்து தகவல் தொடர்புகளும் மாணவர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கவும் உளவியல் துயரத்தைத் தடுக்கவும் பாடசாலை நிர்வாகிகளால் கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறான சம்பவங்கள் நிகழுமாயின் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சுற்றறிக்கை செயலாளர் ஜே.எம். திலகா ஜயசுந்தரவினால் சகல மாகாண பிரதான செயலாளரகள், கல்வி செயலாளர்கள், கல்வி பணிப்பாளர்கள், வலயக் கல்வி பணிப்பாளர்கள், தொகுதி கல்வி பணிப்பாளர்கள், அறநெறி தலைமை அதிகாரிகள், பாடசாலை அதிபர்களுக்கு இன்று (08) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுப் பரவல் நிலைமைகளின்போது பாடசாலை மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் நடவடிக்கைகளுக்கான நெருக்கடிக்கு தீர்வாக வட்ஸ்அப், வைபர், டெலிகிராம் போன்ற சமூக தொடர்பாடல் செயலிகளைப் பயன்படுத்தி பாடசாலை தொடர்பாடல்களும் முன்னெடுக்கப்பட்டன.
தற்போது வரையில் பாடசாலை கட்டமைப்புக்குள் இந்த தொடர்பாடல் செயலி குழுக்களினூடாக மாணவர்கள் மற்றும் மாணவர்களுக்கு மேலதிக கற்றல் செயற்பாடுகளை பெற்றுக்கொடுத்தல், பாட அட்டவணைகளை பகிர்தல், தொடர்பாடல் ஆகிய பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
பாடசாலை கற்றல் நடவடிக்கைகளுக்காக மேற்குறிப்பிட்ட சமூக தொடர்பாடல் செயலி குழுக்களை பயன்படுத்துவதன் காரணமாக மாணவர்கள் சந்திக்கும் பாதகமான அச்சுறுத்தல்கள் தொடர்பில் அமைச்சுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
அதன் காரணமாக தொடர்பாடல் செயலிகளை பயன்படுத்தும்போது கீழ்காணும் பரிந்துரைகளுக்கமைய செயலாற்றுமாறு ஆசிரியர்கள் உள்ளிட்ட சகல தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும்.
மேற்குறிப்பிட்ட தொடர்பாடல் செயலி குழுக்களின் நிர்வாகியாக (Admin) பாடசாலை பிரதானிகள், பிரதி அதிபர், துணை அதிபர், பிரிவுக்கு பொறுப்பான ஆசிரியர்கள் செயற்பட வேண்டும் என்பதுடன் அவர்களின் தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்பார்வையில் ஆரோக்கியமான தொடர்பாடலை மேற்கொள்ள வேண்டும்.
கற்றல் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பாடசாலை கற்றல் காலப்பகுதியை அதிகபட்சம் பயன்படுத்தி நேரடி கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன் பாடங்கள் தொடர்பான ஆலோசனைகளை பெற்றுக்கொடுக்கவேண்டும். பாட ஆலோசனைகளை வழங்குவதற்காக தொடர்பாடல் செயலி குழுக்களை பயன்படுத்துவதை தவிரக்க வேண்டும்.
கற்றல் நடவடிக்கைகளுக்காக தொடர்பாடல் செயலி குழுக்களை பயன்படுத்துவது என்றால், இலகு தொழில்நுட்ப சாதன வசதிகள் இல்லாத மாணவர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகாத வகையில் கற்பித்தல் கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றமை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு சிறந்த முறையை கையாள வேண்டும்.
விசேடமாக முதல்நிலை பிரிவு மாணவ மாணவர்களினால் பாடசாலைக்கு கொண்டுவரப்படவேண்டிய கற்றல் பொருட்கள் அல்லது உபகரணங்கள் என்பன தொடர்பில் அறிவித்தல்களை வழங்கும்போது, முறையான திட்டத்தின் அடிப்படையில் போதியளவு காலத்தை வழங்கி பெற்றோருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அதுதொடர்பான நினைவூட்டல்களுக்காக மாத்திரம் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை பயன்பாட்டை வரையறை செய்வது பொறுத்தமானதாக அமையும்.
மாணவர்கள் வீடுகளில் செய்ய வேண்டிய பயிற்சி மற்றும் பணிகள் தொடர்பில் பாடசாலை கற்றல் அறையில் கற்பித்தல் இடம்பெறும்போதே மாணவர்களுக்கு தெளிவுப்படுத்தல் வழங்கப்பட வேண்டும் என்பதுடன், பெற்றோா் மற்றும் குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்கி மேற்குறிப்பிட்ட தொடர்பாடல் தொழில்நுட்பங்களை இதற்காக பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்குமாறு கண்டிப்புடன் அறிவிக்கிறோம்.
பொதுவான குழுவினராக கருதப்படுபவர்கள் இதுபோன்ற தொடர்பாடல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தும்போது எந்தவொரு காரணத்துக்காகவும் மாணவர்களின் தனியுரிமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும், மனநிலை பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தகவல்கள், வீடியோக்கள், குரல்பதிவுகள், அறிவித்தல்கள் உள்ளிட்ட எதனையும் வெளியிடக் கூடாது என்பதுடன் அவ்வாறான சம்பவங்கள் பதிவானால் அது தொடர்பில் ஒழுக்காற்று ரீதியான கடும் நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கும்.
கடமை ரீதியாக அல்லது கல்வி அபிவிருத்திக்கு ஏற்றவகையிலான தொடர்பாடல் செயலிகளுக்கு மேலதிகமாக முறையற்ற வகையில் பாடசாலை சமூகம் அல்லது ஆசிரியர்களை இணைத்துக்கொண்டு முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்பாடல் செயலி குழுக்களினூடாக பாடசாலை தனித்துவம் அல்லது பாடசாலை சமூகம் அல்லது மாணவர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் தொடர்பில் சம்பந்தப்பட்ட குழுக்களின் நிர்வாகிகள் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்.
அதுதொடர்பில் ஏற்படும் சிக்கல்களின்போது நடைமுறையிலுள்ள சட்டத்திட்டங்கள் மற்றும் தகவல் தொடர்பாடல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.