விருப்பு வாக்குகள் மூலம் 17 முஸ்லிம்கள் பாராளுமன்றத்துக்குத் தெரிவு: கம்பஹா, மாத்தறைக்கு முதல் முஸ்லிம் எம்பி

Date:

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்துக்கான மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காக நடந்த தேர்தலில் விருப்பு வாக்குகள் மூலம் 17 முஸ்லிம்கள் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தேசியப் பட்டியல் மூலம் மேலும் மூவர் பாராளுமன்றம் செல்வதற்கான வாய்ப்புகள் காணப்பட்ட போதும் செய்தி எழுதப்படும் வரை அவர்கள் தொடர்பான விபரங்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டிருக்கவில்லை.

இம்முறை பாராளுமன்றத்துக்குத் தெரிவான முஸ்லிம்களில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அஷ். முனீர் முழப்பர் முன்னிலை வகிப்பவராக இருக்கிறார்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் கம்பஹா மாவட்டம், திஹாரியவில் குடியேறி கம்பஹா மாவட்ட முஸ்லிம் சிங்கள மக்களின் விருப்பு வாக்குளினால் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் மக்களின் விருப்பு வாக்குகளினால் பாராளுமன்றம் சென்ற முதல் முஸ்லிமாக இவர் வரலாற்றில் பதியப்படுகிறார்.

இதற்கு மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அஞ்சான் உம்மா கட்சியினால் வாய்ப்பு வழங்கப்பட்டு பாராளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டிருந்தார்.

அஷ். முனீர் முழப்பர் பெற்றுக் கொண்ட 109,815 விருப்பு வாக்குகள் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி பெற்ற 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்ற வாக்குகளில் 5 ஆவது .இடத்திலிருக்கிறது.

முப்பது வருடங்களுக்கு மேலாக அரசியல் அனுபவம் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பெற்ற (30,883) வாக்குகளை விட மூன்று மடங்கு அதிகமாகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் பெற்ற (21,018) வாக்குகளை விட ஐந்து மடங்கு வாக்குகளையும் இவர் பெற்றிருக்கிறார்.

இந்த வகையில் இம்முறைய பாராளுமன்றத்துக்கு அதிகளவான விருப்பு வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் எம்பியாக அவர் கருதப்படுகிறார்.

கம்பஹா மாவட்டத்தைப் போலவே மாத்தறை மாவட்டத்துக்கும் முதல் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவாகியிருக்கிறார். சமூக செயற்பாட்டாளரான சிவில் எஞ்சினியர் அர்கம் இல்லியாஸ் 53,835 வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியிருக்கிறார்.

குருநாகலை மாவட்டத்துக்கும் 14 வருடங்களுக்குப் பின்னர் ஒரு முஸ்லிம் தெரிவாகியிருக்கிறார். ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 2010 ஆம் ஆண்டு 52,381 வாக்குகளுடன் ஹஸன் அலவி பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்தார்.

இதற்குப் பின்னர் தற்பொழுது குருநாகல் தல்கஸ்பிட்டியைச் சேர்ந்த சட்டத்தரணி முஹம்மத் அஸ்லம் 67,346 விருப்பு வாக்குளால் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார். இனவாதத் தாக்குதலுக்கு பலியான டொக்டர் ஷாபியும் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவராவார்.

தெரிவு செய்யப்பட்ட 17 முஸ்லிம் எம்பிக்களில் 09 பேர் புதியவர்களாவர். அத்தோடு புதிதாகத் தெரிவு செய்யப்பட்டவர்களில் சட்டத்தரணி (அஸ்லம்), பொறியியலாளர் (அர்கம்), வைத்தியர் (ரிஸ்வி ஸாலி), மார்க்க அறிஞர் (முனீர் முழப்பர்) எனப் பல்வேறு துறைசார்நதவர்கள் அடங்குவது குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் பரந்து வாழும் முஸ்லிம் சமூகத்தில் பல மாவட்டங்களில் இருந்தும் பிரதிநிதிகள் அனுப்பப்பட்டிருப்பதும் விஷேட அம்சமாகும். கொழும்பு (Dr. ரிஸ்வி ஸாலி, முஜிபுர் ரஹ்மான், மரி்க்கார்), கம்பஹா (முனீர் முழப்பர்), கண்டி (பஸ்மின், ரியாஸ் பாரூக், ரவூப் ஹக்கீம்), குருநாகலை (அஸ்லம்), மாத்தறை (அர்கம் இல்யாஸ்), புத்தளம் (பைஸல்), திருகோணமலை (இம்ரான் மஹ்ரூப்), அம்பாறை (உதுமா லெப்பை, தாஹிர்), மட்டக்களப்பு (ஹிஸ்புல்லாஹ்), வன்னி (மஸ்தான், ரிஷாட்), கேகாலை (கபீர் ஹாஷிம்) என 11 மாவட்டங்கள் தமது பிரதிநிதிகளைப் பெற்றுள்ளன. களுத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி மூலமாக இம்தியாஸ் பாக்கிர் மாக்காருக்கு தேசியப் பட்டியல் நியமனம் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தி மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குக் தேசியப்பட்டியல் நியமனம் கிடைக்கப்பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தியினூடாக எம்.என்.இக்ராமுக்கு தேசியப் பட்டியல் நியமனம் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...