நவம்பர் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் தொகுதியில் பல்வேறு கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்ற சூழ்நிலையில் NFGG என்ற அமைப்பின் சார்பில் புத்தளம் தொகுதியில் போட்டியிடுகின்ற இஷாம் மரிக்காருக்கு NFGG இன் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியை வழங்குவது தொடர்பான ஒரு உறுதிமொழியை அதன் தலைவர் அப்துர் ரஹ்மான் வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பில் வேட்பாளரான இஷாம் மரிக்காரின் சகோதரர் இல்ஹாம் மரிக்கார் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த 8ஆம் திகதி புத்தளத்துக்கு வருகைத் தந்த தலைவர் அப்துர் ரஹ்மான் புத்தளம் நகரக் கிளையின் தலைவர் உட்பட செயற்குழு உறுப்பினர்களை சந்தித்த பின் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பான தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.
இதன் பிரகாரம் எதிர்வரும் பொதுத்தேர்தலில் NFGG சார்பில் தேசியப்பட்டியல் அங்கத்துவத்தை இஷாம் மரிக்காருக்கு வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
புத்தளம் தேர்தல் தொகுதி முஸ்லிகளை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு தேர்தல் தொகுதியாக இருப்பதோடு நடக்கவிருக்கும் தேர்தலில் ஆளுங்கட்சி தேசிய மக்கள் சக்தி சார்பிலும் அதேபோன்று சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பிலும் சுயேட்சைக் குழுக்கள் சார்பிலும் பல்வேறு வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு புத்தளம் தொகுதிக்கான ஒரு முஸ்லிம் வேட்பாளரை தெரிவு செய்கின்ற பிரயத்தனத்தில் மும்முரமாக வேட்பாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருப்பதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
இச்சூழ்நிலையிலேயே புத்தளத்துக்கு வருகைத்தந்த அப்துர் ரஹ்மான் இஷாம் மரிக்கார் குறித்த ஒரு தகவலை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.