ஜப்பானில் இயங்கி வருகின்ற ஜப்பான் இஸ்லாமிய நிலையத்தின் பணிப்பாளராக நீண்டகாலமாக செயற்பட்டு வந்த, ஈராக்கை பிறப்பிடமாகக்கொண்ட, கலாநிதி ஸாலிஹ் சாமிராயி நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் நேற்று சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் காலாமானார்.
கலாநிதி ஸாலிஹ் மஹ்தி ஸாலிஹ் சாமிராயி அவர்கள் 1932 இல் பிறந்தவர். தனது வாழ்க்கையை ஒரு இஸ்லாமிய பணியாளராகவும் ஆய்வாளராகவும் வரலாற்றுத்துறை அறிஞராகவும் அமைத்துக் கொண்டவர்.
வாழ்நாளில் பெரும்பகுதியை ஜப்பானிய இஸ்லாமிய நிலையத்தின் பணிப்பாளராகவும் உலகின் வேறு பல பாகங்களுக்கும் சென்று அப்பணியிலே ஈடுபடுவதிலும் கழித்தவர்.
இஸ்லாத்தின் அழகிய செய்திகளை இப்பூமியில் உள்ள மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற பேராவலுடன் தன் வாழ்நாளில் 50 வருடத்திற்கு மேற்பட்ட பகுதியை இவ்வாறு அவர் கழித்துள்ளார்.
இந்த வகையில் ஜப்பான் இஸ்லாமிய நிலையத்தை உருவாக்குவதில்
கலாநிதி ஸாலிஹ் அவர்களின் பங்கு மகத்தானது.
இது தவிர உலகின் பல பாகங்களுக்கும் சென்று , இவ்வாறான பணியில் தொடராக ஈடுபட்டு வந்தார். தன்னுடைய ஆரம்பக் கல்வியை தனது பிறந்த நாடான ஈராக்கில் பெற்றுக்கொண்டதன் பின்னால் ,1960 இல் விவசாயத்துறை பட்டதாரியாக பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.
மீண்டும் விவசாயத்துறையில் 1963 ல் ஜப்பானில் டோக்கியாவின் மிகச் சிறந்த பல்கலைக் கழகத்தில் முதுமாணி பட்டத்தையும் , 1966ஆம் ஆண்டு அதே பல்கைலக்கழத்தில் விவசாயத்துறையில் கலாநிதி பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.
மேலும் பாக்தாத் பல்கலைக்கழகத்தின் விவசாயக் கல்லூரியில் பேராசிரியராக 1966ல் நியமிக்கப்பட்டு ,பின்னர் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள விவசாயக் கல்லூரியில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
சவூதி அரேபியாவில் இருந்த காலப்பகுதியில் விவசாயத்துறை தொடர்பான பல்வேறு ஆய்வுப்பணிகளை மேற்கொண்ட இவர், ஜித்தாவில் உள்ள மன்னர் அப்துல் அஸீஸ் பல்கலைக்கழகத்தின் உலர் வலயங்களுக்கான விவசாயப்பிரிவை உருவாக்கி அதன் தலைவராக 1980 – 1996 வரை பணியாற்றினார்.
விவசாய அறிவியல் பற்றிய பல ஆராய்ச்சிகள், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை எழுதியுள்ளதுடன் ஜப்பானில் இஸ்லாம் பற்றிய புத்தகங்கள் மற்றும் உலகின் பெரும்பகுதிகளில் உள்ள முஸ்லிம்களின் நிலைமைகள் பற்றிய புத்தகங்களையும் எழுதி வெளியிட்டுள்ளமை, கலாநிதி ஸாலிஹ் ஸாமிராயி அவர்களின் குறிப்பிடத்தக்க அறிவியல் பணிகளாகும்.
ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் அதைச் சுற்றியுள்ள நாடுகளிலும், கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்காவிலும், வடக்கு மற்றும் லத்தீன் அமெரிக்காவிலும் பயணம் மேற்கொண்ட சமகால முஸ்லிம் பயணிகளில் ஒருவராகவும் இவர் கருதப்படுகிறார்.
ஜப்பானின் டோக்கியோவில் இஸ்லாமிய மையத்தை நிறுவுவதில் பெரும் பாங்காற்றிய இவர் , அதன் இயக்குனராக 1996 முதல் இறக்கும் வரை பணியாற்றினார்.
1961ல் ஜப்பானின் டோக்கியோவில் முஸ்லிம் மாணவர் சங்கத்தை நிறுவியதுடன் இஸ்லாமிய இளைஞர்களுக்கான சர்வதேச ஆலோசகராகவும் வாமி உட்பட பல சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளுக்கு ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
இத்தகைய பல சிறப்புப் பணிகளை மேற்கொண்டு தன்னுடைய மறுமைப் பயணத்தை ஆரம்பித்திருக்கின்ற கலாநிதி ஸாலிஹ் சாமிராயி அவர்களை எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக.
தமிழாக்கம்.
அபூ முஸ்அப்
புத்தளம்