பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் இஸ்லாத்தை அவமதித்ததாக கூறி அவருக்கு எதிராக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.
குறித்த வழக்கின் தீர்ப்பு கடந்த 14ஆம் திகதி வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அன்றைய தினம் நாடாளுமன்ற தேர்தல் தினம் என்பதால் ஒத்திவைக்கப்பட்டது.
‘இஸ்லாம் ஒரு புற்றுநோய்’ என ஞானசாரதேரர் வெளியிட்ட கருத்துக்கு எதிராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் பொரளை ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் ரிகாஸ் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய, கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் மேலதிக நீதிவான் (3 ஆம் இலக்க அறை) முன்னிலையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, முறைப்பாட்டாளர் தரப்பின் சாட்சியாளர் உள்ளிட்ட சாட்சியாளர்கள் நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், குறித்த வழக்கை சுமுகமாக முடித்துக்கொள்ளும் நோக்கில் தனது சேவை பெறுநர் நீதிமன்றில் பகிரங்க மன்னிப்பு கோர தயாராக இருப்பதாக ஞானசார தேரரின் சட்டத்தரணிகள் நீதிமன்றுக்கு அறிவித்திருந்தனர்.
இவ்வாறான நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி வழங்குவதாக நீதிவான் அறிவித்துள்ளார்.