சர்வதேச பலஸ்தீன் ஒருமைப்பாட்டு தின நிகழ்வுகள் நாளை நவம்பர் மாதம் 29 ஆம் திகதி கொழும்பு 07 இல் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவன கேட்போர் கூடத்தில் பிற்பகல் 04.00 மணி முதல் இடம்பெறும்.
இந்நிகழ்வை இலங்கை பலஸ்தீன் ஒருமைப்பாட்டு இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்வில், இலங்கை பலஸ்தீன் ஒருமைப்பாட்டு இயக்கத்தின் தலைவரும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சரும், பாராளுமன்ற சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.
மேலும் இந்நிகழ்வில் இலங்கைக்கான பலஸ்தீன தூதரக பதில் தூதுவர் ஹிஷாம் அபு தாஹா, வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கான ஐ.நா. வதிவிட பிரதிநிதி Marc-Andre Franche, பேராதனை பல்கலைக்கழக மனித உரிமைகள் கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம, பேராதனை பல்கலைக்கழக கலை பீட சிரேஷ்ட பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி ஆகியோர் உரை நிகழ்த்தவுள்ளனர்.
இந்நிகழ்வில், இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எழுதிய ‘பலஸ்தீனம்’ நூல் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்படும்.
இலங்கை பலஸ்தீனம் ஒருமைப்பாட்டு இயக்கத்தின் பிரதித் தலைவர் ஹனா இப்றாஹிம் நன்றியுரை நிகழ்த்துவார்.
இந்நிகழ்வில் சகலரையும் கலந்து கொண்டு பலஸ்தீன விடுதலைக்காக குரல் கொடுக்குமாறு ஏற்பாட்டுக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
1947 ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் 181 ஆவது தீர்மானத்தின் மூலம் பலஸ்தீனத்தில் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை நினைவு கூரும் வகையில் வருடா வருடம் நவம்பர் 29 ஆம் திகதியை பலஸ்தீன ஒருமைப்பாட்டு தினமாக ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியுள்ளது.