2023 ஆம் ஆண்டில் இங்கிலாந்து, வேல்ஸ் பகுதிகளில் புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைகளுக்குப் பெரும்பாலான பெற்றோர்கள் ‘முஹம்மது’ என்ற பெயரை தேர்ந்தெடுத்துள்ளனர்.
இங்கிலாந்தின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் ( (ONS) வெளியிட்ட தகவல்படி, கடந்த ஆண்டு ‘முஹம்மது’ என்ற பெயர் முதலிடத்தைப் பிடித்து, நீண்ட காலமாக முன்னணியில் இருந்த ‘நோவா’ என்ற பெயரை பின்னுக்கு தள்ளியுள்ளது.
‘முஹம்மது’ பெயர் 2016 முதல் மிகப்பிரபலமான முதல் 10 பெயர்களில் இடம்பிடித்துள்ள நிலையில், 2022 ஆம் ஆண்டில் இரண்டாவது இடத்தில் இருந்தது. 2023 ஆம் ஆண்டு, மக்களின் அதிகபட்ச ஆதரவால் முதலிடத்தைப் பெற்றது.
மூன்றாவது இடத்தில் ‘ஜார்ஜ்’, ‘ஒலிவர்’ பெயர்கள் இடம்பெற்றன. பெண் குழந்தைகளுக்கான பிரபல பெயர்களாக ‘ஒலிவியா,’ ‘அமீலியா,’ மற்றும் ‘ஐஸ்லா’ ஆகிய பெயர்கள் 2023 ஆம் ஆண்டின் முதன்மைத் தேர்வாக உள்ளன.
ஆனால், இளவரசர் சார்லஸ், ஜார்ஜ், மற்றும் ஹாரி போன்ற பிரித்தானிய அரச குடும்பத்தைச் சார்ந்த பெயர்கள் முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும்போது பிரபலம் குறைந்த பெயர்களாக உள்ளன.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் முஹம்மது பெயர்கள் ஏன் மிகவும் பிரபலமாகிவிட்டன என்பதற்கான ‘உறுதியான பதில்’ தங்களிடம் இல்லை என தேசிய புள்ளிவிவர அலுவலகம் கூறியுள்ளது.
எனினும் முஸ்லிம் சமூகத்தின் அளவு அதிகரிப்பாக இருக்கலாம் எனவும் முஹம்மது என பெயரிடப்பட்ட பிரபல விளையாட்டு வீரர்களான லிவர்பூல் முன்கள வீரர் மொஹமட் சலா, குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி மற்றும் மொஹமட் (மோ) ஃபரா போன்றவர்களும் ஒரு காரணியாக இருக்கலாம் எனவும் தேசிய புள்ளிவிவர அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.