இந்திய வக்ஃப் சட்ட சீர்திருத்தம்: முஸ்லிம்களை குறி வைத்த மோடியின் மற்றுமொரு சதி?

Date:

இந்திய முஸ்லிம்களுக்கு எப்போதும் தொல்லை தந்து வரும் பிரதமர் நரேந்திர மோடியின் இனவாத அரசு, பாரதத்தில் உள்ள வக்ஃப் எனும் முஸ்லிம் அறக்கட்டளைகளை நிர்வகிக்கும் சட்டங்களை மாற்றுவதற்கு முனைந்திருப்பது அங்குள்ள சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரிடையே பெரும் அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதன் நோக்கம் மஸ்ஜிதுகள், மத்ரஸாக்கள் போன்ற இஸ்லாமிய பொது அமைப்புக்களின் சொத்துக்களை மேற்பார்வை செய்யும் வக்ஃப் சபைகளின் செயற்பாட்டில் உள்ள ஊழலை நீக்கி அவற்றின் செயல்திறனை மேம்படுத்துவது என, என்றுமே முஸ்லிம்களின் நலனில் உண்மையான அக்கறை காட்டாத மோடி அரசு கூறுகின்றது.

ஆனால் நடுநிலையான ஆய்வாளர்கள் இதன் நோக்கம் வக்ஃப் சொத்துக்களில் திட்டமிட்டே குழறுபடிகளை ஏற்படுத்தி அவற்றை அபகரிப்பதும் மஸ்ஜிதுகள், மத்ரஸாக்கள், தர்காக்கள், நிலங்கள், அடக்கஸ்தலங்கள், அநாதை இல்லங்கள், வியாபரஸ்தலங்கள் உட்டபட்ட இஸ்லாமிய நிறுவனங்களை ஒழிப்பதுமே ஆகும் என அஞ்சுகின்றனர்.

வக்ஃப் சொத்துக்களை யார் நிர்வகிக்கின்றார்கள் மற்றும் திடீரென மோடி அரசின் கவனம் இவ்விடத்தியத்திற்கு திரும்பிய பின்னணி என்ன?

வக்ஃப் எனப்படுவது இஸ்லாமிய மத நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களுக்கு முஸ்லிம்கள் நன்கொடையாக வழங்கும் பணம், பொருள் மற்றும் அசையும், அசையா சொத்துக்கள் ஆகும். இந்த வக்ஃப் முறை இஸ்லாம் தோன்றிய காலம் தொட்டு இந்தியா உட்பட உலகம் முழுவதுமுள்ள முஸ்லிம் நாடுகளில் நடைபெற்று வருகின்றது.

எதையேனும் அல்லாஹ்விட்காக வக்ஃப் செய்து விட்டால் அதை வழங்கியவரோ அல்லது அவருடைய வாரிசுகளோ மீளப்பெற முடியாது. பிற்காலத்தில் ஏனைய மதத்தினரின் டிரஸ்ட் எனப்படும் பொது நிதியம் என்ற கோட்பாட்டிற்கான உள்ளுணர்வை பெற்றதே முஸ்லிம்களின் இந்த வக்ஃப் முறை மூலம் தான் என்றால் அது மிகையாகாது.

வக்ஃப் மூன்று வகையாகும். பொது வக்ஃப் மஸ்ஜிதுகள், மத்ரஸாக்கள், மருத்துவமனைகளை உள்ளடக்கியதாகும். குடும்ப வக்ஃப் எனப்படுவது ஒரு குறிப்பிட்ட வருமானத்தை முனமொழியப்பட்ட குடும்பங்கள் மற்றும் நன்கொடையாளர்களின் உறவினர்கள் மற்றும் சந்ததியினர் இடையே பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. மூன்றாவதாக நன்கொடைகளின் தனிப்பட்ட மற்றும் பொது பயன்பாடுகளின் கலவையை உள்ளடக்கியது. உதாரணமாக, தனியார் வக்ஃப் வருவாயை மாணவர்கள் போன்ற ஒரு குறிப்பிட்ட குழுவிற்கே பயன்படுத்த முடியும் என வரையரை விதிப்பதாகும்.

இந்தியாவில், காணி வடிவத்தில் வக்ஃப் செய்யப்பட்ட சொத்துக்கள் சுமார் ஒரு மில்லியன் ஏக்கர் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சொத்துக்கள் இந்திய அரசு மேற்பார்வையிடும் 32 மாநில வக்ஃப் சபைகளால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

இவற்றில் அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட முஸ்லிம் அரச பிரதிநிதிகள், முஸ்லீம் சட்டமன்ற உறுப்பினர்கள் (தற்போதைய, அல்லது முன்னாள் சட்டமன்றததில் இருந்தவர்கள்), முஸ்லிம் அறிஞர்கள் மற்றும் சொத்து நிர்வாகத்தை மேற்பார்வையிடும் பராமரிப்பாளர்கள் (முதவல்லிகள்) உட்படுவர்.

இவற்றில் தற்போதைய சட்டத்தின் பிரகாரம் முஸ்லிம் அல்லாதவர்கள் இணைய முடியாது.

மத்திய வக்ஃப் சபை மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கி இந்தியா முழுவதும் உள்ள மாநில அளவிலான வக்ஃப் சபைகளை மேற்பார்வை செய்கிறது. சபை ஒன்றில் குறைந்தது இரண்டு பெண் உறுப்பினர்களாவது இருத்தல் கட்டாய நியதியாகும்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, 1954 ஆண்டு மத்திய வக்ஃப் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது 1995 ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டம் மூலமாகவே இந்தியாவில் வக்ஃப் சொத்துக்கள் நிர்வகிக்கப்படுகின்றன.

அதற்கு முன் 1913 ஆம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களின் கீழ் ‘முசல்மான் வக்ஃப் உறுதியாக்க சட்டம்’ எனப்படும் சட்டம் இருந்து வந்தது. அதன் பின் 1923 ஆம் ஆண்டு முசல்மான் வக்ஃப் சட்டம் இயற்றப்பட்டது.

வக்ஃப் சொத்துக்களுக்கான பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக 2013 ஆண்டில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இத்திருத்தங்கள், சட்டங்களை மீறலுக்காக சிறைப்படுத்தல் போன்ற தண்டனைகளை அறிமுகப்படுத்தியது.

மேலும், வக்ஃப் சொத்துக்களை விற்பனை செய்தல், பரிசாக வழங்குதல், பரிமாற்றம் செய்தல், அடமானம் வைத்தல் ஆகியவற்றை முற்றாக தடை செய்கின்றது.

தற்போது முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் யாவை?

வக்ஃப் சபைகளின் நிர்வாகத்தை மாநில அரசுகளுக்கு மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட 40 க்கும் மேற்பட்ட திருத்தங்களை முன்மொழியப்பட்டுள்ளன. அத்துடன் முஸ்லிம் அல்லாதவர்கள் வக்ஃப் சபைகளில் அங்கம் வகிக்கவும் யோசனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், முஸ்லிம் அல்லாதவர்களும் இஸ்லாமிய அமைப்புகளுக்கு நன்கொடை வழங்க இயலும் என்ற நியதியை நீக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சிறுபான்மை இனங்களில் மதம், கலாசாரம் தொடர்பான விடங்களை அவர்கள் பேணி வரவும் பாதுகாக்கவும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 26 வது ஷரத்து ஏற்கனவே வசதியளித்துள்ள நிலையில், திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை போன்றவை தொடர்பாக முஸ்லிம்களுக்குள்ள பிரத்தியேக ஷரீஆ சட்டங்கள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரனாக இருப்பதாக கூறும் மோடி அரசு அவற்றை இரத்து செய்து விட வேண்டும் எனவும் வாதிட்டு வருகின்றது.

இது பற்றி கருத்துத் தெரிவித்த ஜமியத்துல் உலமா ஹிந்த் அமைப்பு, ஷரீஆ சட்டத்தின் பிரகாரம் பல விடயங்களை மேற்கொள்ள இந்திய அரசியலமைப்பு சட்டம் உரிமை வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் அது பற்றி கருத்துத் தெரிவிக்கையில்,

அவ்வமைப்பின் தலைவர் அஷ்ஷேஹ் மதனி, வக்ஃபு சட்டம் பற்றி இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை என அண்மையில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளது தொட்டு தமது வியப்பை தெரிவித்தார்.

மேலும் தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகியவையும் இந்திய அரசியலமைப்பில் பெயரளவில் குறிப்பிடப்படவில்லை எனக்கூறி அவற்றையும் தடை செய்ய மோடி முற்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை எனவும் அவர் கூறினார்.

தற்போதைய வக்ஃப் சட்டம் வக்ஃப் சொத்துக்கள் தொடர்பான சர்ச்சைகளை ஒரு நீதித்துறை அதிகாரி, சிவில் சேவை அதிகாரி மற்றும் முஸ்லீம் சட்டத்தில் நிபுணத்துவம் வாய்ந்த ஒருவர் ஆகிய மூவர் கொண்ட ஒரு அரச தீர்ப்பாயம் மூலம் தீர்க்க வேண்டும் என வழிகாட்டுகின்றது.

இந்த அமைப்பு நீதிமன்றத்தைப் போன்று அதிகாரம் உள்ளதாக இருப்பதோடு வக்ஃப் தொடர்பான விடயங்களுக்காக மட்டுமே நிறுவப்பட்டதாகும். தற்போதுள்ள சட்டங்களின்படி, இத்தீர்ப்பாயத்தின் முடிவுகளே இறுதியானது.

ஆனால், முன்மொழியப்பட்டுள்ள புதிய திருத்தங்களின் படி மேற்படி தீர்ப்பாயத்தின் முடிவிட்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம். ஆனால் மேற்படி வக்ஃப் தீர்பாயங்கள் உருவாக்கப்பட்ட நோக்கமே பொதுவான நீதிமன்றங்களின் சுமையை குறைப்பதாகும்.

முஸ்லிம்களை கவலை கொள்ளச் செய்துள்ள மற்றுமொரு விடயம் என்னவெனில் வக்ஃப் செய்யப்பட்டுள்ள சொத்துக்களுக்கான ஆவணங்கள் இருப்பதை கட்டாயப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளமையாகும்.

பல வக்ஃபுகள் 500 முதல் 600 ஆண்டுகள் பழையதாக இருப்பதால் அவற்றின் ஆவணங்களை சமர்பிப்பது முடியாத காரியமாகும்.

வக்ஃப் செய்யப்பட்டுள்ள மஸ்ஜிதுகள், பாடசாலைகள், அடக்கஸ்தலங்கள் போன்றவற்றில் 60 சத வீதத்தின் நிலை இதுவே. இவை இனி, முஸ்லிம்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதையே முழு நேரப்பணியாகக் கொண்டுள்ள மோடியின் அரசு மூலம் சட்ட சிக்கல்களுக்கு உட்படுத்தப்படலாம் என முஸ்லிம்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

வக்ஃப் சபைகளில் பன்முகத்தன்மை இல்லாமை, ஊழல் மலிந்துள்ளமை மற்றும் வக்ஃப் சொத்துக்களை திரும்பப் பெற முடியாமை, வக்ஃப் சொத்துகளில் எந்த மாற்றமும் செய்ய முடியாமை போன்றவற்றை இச்சட்டம் சீர்திருத்தப்பட வேண்டிய காரணங்களாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் வக்ஃப் காணிகளில் அத்துமீறி குடியேருபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இயலும் என்ற ஷரத்தை நீக்க வேண்டும் என மேற்படி முன்மொழிவு கூறுகின்றது. தற்போது சுமார் 60,000 வக்ஃபு காணிகள் சட்ட விரோத குடியேற்றங்களுக்கு இலக்காகியுள்ளன.

எவ்வாறிருந்த போதிலும் தவறான நிர்வாகமும் ஊழலும் வக்ஃப் சபைகளில் பரவலாக உள்ளமையையும், இதனால் அவற்றால் கிடைக்க வேண்டிய வருவாய் சரியாக கிடைப்பதில்லை என்பதையும் இந்திய முஸ்லீம் சமூகம் ஒப்புக்கொள்கின்றமை குறிப்பிட்டத்தக்கது.

ஆனால் இவற்றிற்கு தீர்வை வழங்காமல் வக்ஃப் சபைகளில் இனவாத ஹிந்துக்களை நுழைப்பதிலும் வக்ஃப் சம்பந்தமான அதிகாரங்களை தன் வசப்படுத்ததுவதிலேயே மோடி அரசு குறியாகவுள்ளது.

ஆனால் அரசை சிரமத்திற்குள்ளாக்குவதற்காக, மேற்படி முன்மொழிவு பற்றி தவறான செய்திகளை முஸ்லிம் அமைப்புக்கள் பரப்பி வருவதாகவும் அவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் மோடி அரசு கூறியுள்ளது. மேலும் சில முஸ்லிம் அமைப்புக்கள், வக்ஃபு சபைகளில் மலிந்துள்ள ஊழல் காரணமாக மேற்படி திருத்தங்களை வரவேற்பதாகவும் அரசு கூறுகின்றது.

வக்ஃபு சபைகளில் ஊழல் உட்பட்ட பிரச்சினை இருந்தால் அதை தீர்க்க முஸ்லிம்களுக்கே அதிகாரம் அளிக்க வேண்டும் என்றும் அரசு அதன் அதிகாரங்களை முற்றாக கைப்பற்ற முற்படக்கூடாது என்றும் பல முஸ்லிம் அமைப்புக்கள் வலியுறுத்துகின்றன.

மேலும் வக்ஃபு சட்டத்திற்கு சீர்திருத்தங்கள் அவசியம் என்ற போதிலும் மோடி அரசு முன்மொழிந்துள்ளவை தீய நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டுள்ளவை எனவும் அவ்வமைப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இதே வேளை, பொருளாதார ரீதியில் பின்தங்கிய ஒரு முஸ்லிம் பிரிவாகிய பஸ்வந்தா முஸ்லிம்களின் தலைவரும் மோடியின் பாஜக அரசை பிரதிநிதித்துவப் படுத்துவருமான ஆதிஃப் ரஷித் போன்ற சிலரும் அது போன்ற சில முஸ்லிம் அமைப்புக்களும் இது விடயத்தில் மோடி அரசிற்கு ஆதரவு தெரிவித்தவாறு, மேற்படி முன்மொழிவுகள் விடயத்தில் முஸ்லிம்கள் கவலை கொள்வது அவசியமற்றது என கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வக்ஃப் சபையின் முன்னாள் கணக்காளர் நாயகமாக கடமையாற்றிய ஃபாருகீ இது பற்றி கருத்துத் தெரிவிக்கையில்,

மேற்படி முன்மொழிவு மூலம் முஸ்லிம்களுடைய மதஸ்தலங்களையும், ஸ்தாபனங்களையும் ஒழிப்பதும் அதன் மூலம் பெரும்பான்மை ஹிந்துக்களின் ஆதரவை தேர்தல்களில் பெறுவதுமே அரசின் உள்நோக்கம் எனக் குறிப்பிட்டார்.

சுமார் 40 மில்லியன் முஸ்லிம்கள் வசிக்கும் உத்தர் பிரதேஷ் மாநிலத்தில் 162,229 வக்ஃபு சொத்துக்கள் இருப்பதுடன் அவற்றில் பல மிகவும் பழமையானவையும் ஆவணங்கள் இல்லாதவையாளவும் இருப்பதால், பொதுவாக முஸ்லிம்களுக்கு அதிகம் துண்பம் கொடுத்து வரும் மோடியின் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அம்மாநில அரசின் இனவாத முதல்வர் யோகி ஆதித்யநாத், மேற்படி முன்மொழிவுகள் சட்டமூலமாக ஆகும் பட்சத்தில் அங்குள்ள பல்லாயிரக்கணக்கான வக்ஃபு சொத்துக்களை அழித்தொழித்து விடுவார் அல்லது அரசுடைமையாக்கி விடுவார் என முஸ்லிம்கள் கடும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

வக்ஃப் சொத்துக்களின் மதிப்பென்ன?

மிகப்பழமையான அரச தரவுகளின் படி இந்தியா முழுவதிலுமுள்ள வக்ஃப் சொத்துக்களின் மொத்த மதிப்பு சுமார் 14 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

ஆனால் பெரும்பகுதி வக்ஃபு சொத்துக்கள் அமைந்திருப்பது நகர்புறங்களில என்றபடியால் அவற்றின் தற்காலத்து அசல் பெருமதி அரச கணிப்பீட்டை விட பல மடங்கு அதிகமாகும் என விற்பன்னர்கள் கூறுகின்றனர்.

மூலம்: அல் ஜஸீரா

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...