இறுதி நபித்துவத்திற்கு முன்பிருந்து இலங்கையில் அரபு மொழி இருந்து வருகிறது: அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் அரபு மொழி தினச் செய்தி

Date:

ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சர்வதேச அரபு மொழி தினம் இன்று (18) உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. அரபு மொழித்தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வெளியிட்டுள்ள செய்தியை வாசகர்களுக்கு தருகிறோம்.

அரபு மொழி என்பது செமித்திய மொழிக் குடும்பத்தின் பிரதானமான மொழிகளில் ஒன்றாகும்.

இது கி.பி. 06 ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதிகளில் அரேபிய தீபகற்பத்தில் வாழ்ந்த நாடோடி பழங்குடி மக்களால் பேசப்பட்ட ஒரு சிறுபான்மை மொழியாகும்.

இன்று மிகக் கூடுதலாக பேசப்படும் செமித்திக் மொழி அரபு மொழியாகும் என்பதுடன் 26 நாடுகளில் ஆட்சி மொழியாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரப்பூர்வ மொழிகளுள் ஒன்றாகவும் 310 மில்லியன் (31 கோடி) மக்களின் தாய்மொழியாகவும் அரபு மொழி அமைந்துள்ளது.

இறுதி நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது நபித்துவத்துடன் மத்திய கிழக்கு மக்களின் பேச்சு மொழியாகக் காணப்பட்ட அரபு மொழியானது காலப்போக்கில் சர்வதேச மொழியாக செல்வாக்குப் பெற்றது.

இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களான அல்-குர்ஆன், அல்-ஹதீஸ் ஆகியன அம்மொழியில் அமைந்தமை அதன் அந்தஸ்தை சர்வதேச மட்டத்தில் பறைசாற்றியதுடன், அது சொற்செறிவும் பொருள் வளமும் கொண்ட செழுமைமிக்க ஒரு செம்மொழியாகும்.

அல்லாஹு தஆலா அல்-குர்ஆனில் அரபு மொழி பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்:

‘நீங்கள் விளங்கிக்கொள்வதற்காக அரபு மொழியிலான குர்ஆனாக நாமே இறக்கி வைத்தோம்’. (ஸூறா யூஸுஃப் : 03)

‘அல்-குர்ஆன் அரபு மொழியில் அருளப்பெற்றதற்கான காரணம், அது எல்லா மொழிகளிலும் தெளிவானதும் விசாலமானதுமான செம்மொழியாகும். சொல்லில் தெளிவும் கருத்தில் செறிவுமிக்க மொழியாகும். மனதில் நிற்கும் பொருளை வெளிப்படுத்துவதில் முதற்தரமான மொழியாகும் என்பதனாலாகும்.’ (தஃப்ஸீர் இப்னு கஸீர்)

அறிவுக் கலாசாரத்தை ஊக்குவிப்பதிலும் அறிவியலையும் தத்துவ சித்தாந்தங்களையும் முழு உலகிற்கும் பரவச்செய்வதிலும் அரபு மொழியின் பங்கு காத்திரமானது. அதே போன்று உலகெங்கிலுமுள்ள சமூகப் பரம்பல்களுக்கு மத்தியில் ஒரு கலாசார இணைப்பொன்றையும் அது ஏற்படுத்தியது.

வரலாற்றாசிரியர்களின் கருத்துப்படி, அரபு மொழிக்கும் இலங்கைக்குமிடையிலான தொடர்பானது, இறுதி நபித்துவத்துக்கு முற்பட்ட பண்டைய அரேபிய வர்த்தகர்கள் இலங்கையுடன் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்த நாளிலிருந்து இருந்து வந்துள்ளதாக வரலாறு குறிப்பிடுகிறது.

19 ஆவது நூற்றாண்டில் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் என்று அனைவராலும் அழைக்கப்படும் அல்லாமா ஸெய்யித் முஹம்மத் லெப்பை ஆலிம் (ரஹ்) அவர்களின் தலைமையில் அரபு மொழியிலான இஸ்லாமிய சமயக் கல்விப் போதனைகள் மத்ரஸாக்கள் மட்டத்தில் துவக்கிவைக்கப்பட்டன.

வருடாந்தம் டிசம்பர் 18 ஆம் திகதி அரபு மொழித் தினமாக ஐக்கிய நாடுகள் சபையினால் அனுஷ்டிக்கப்பட்டு வருவதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ மொழிகளான ஆறு மொழிகளில் அரபு மொழியும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக முஸ்லிம்கள் அல்-குர்ஆனையும் அல்-ஹதீஸையும் புரிந்துகொள்வதற்கும் தொழுகைகளை உயிரோட்டமாக அமைத்துக் கொள்வதற்கும் அன்றாட திக்ர், அவ்ராதுகள், சந்தர்ப்ப துஆக்களை பொருளுணர்ந்து ஓதுவதற்கும் அரபு மொழியைக் கற்றுக்கொள்வது இன்றியமையாதது.

இலங்கை முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதவர்கள் அரபு மொழியைக் கற்றுக்கொள்வதற்கு முனைவதனூடாக நாட்டின் அபிவிருத்திக்கும் வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்ய முடியும்.

மேலும் இஸ்லாத்தின் விழுமியங்கள் மற்றும் போதனைகளை அதன் மூலமொழியிலிருந்து நேரடியாக விளங்கிக் கொள்வதற்கு இது நல்லதொரு வாய்ப்பாக அமையும்.

சர்வதேச அரபு மொழிக்கான தினமான இந்நாளை நினைவுகூரும் அதேவேளை மொழி, மத, கலாச்சார பன்முகத்தன்மையை மதித்து செயல்படுவதனூடாக மானுடத்துக்குப் பங்காற்றுவோமாக!

 

 

 

Popular

More like this
Related

மீள்பரிசீலனைக் குழுவை HIGHJACK  பண்ணிய அபூஹிந்த்: ‘Framework ஐ நாங்கள் தயாரிக்கவில்லை’ கைவிரிக்கும் அர்க்கம் நூராமித்

அபூ அய்மன்  பின்னணி பல நூற்றாண்டு காலமாக தேசப்பற்றுடனும், இன நல்லிக்க பணிகளை முதன்மைப்படுத்தி...

இலஞ்சம் பெற்ற வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி கைது!

10 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்ற தெஹியத்தகண்டிய வனஜீவராசிகள்...

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இந்த வார தொடக்கத்தில் இரு பெண்...

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான குழுவின் அறிக்கை நீதி அமைச்சிடம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்வது குறித்து  மதிப்பாய்வு செய்து...