பிரபல தபேலா இசைமேதை சாகிர் ஹுசைன் (73) அமெரிக்காவில் காலமானார்.
அமெரிக்கா சென்பிரான்சிஸ்கோ உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த தகவலை ஜாகிர் உசேனின் நண்பரும் புல்லாங்குழல் கலைஞருமான ராகேஷ் சௌராசியா நேற்று தெரிவித்துள்ளார்.
சாகிர் ஹுசைன், அமெரிக்காவில் வசித்து வந்துள்ள நிலையில், அவருக்கு நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் இருந்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த ஒரு வாரமாக சாகிர் ஹுசைன் மருத்துவமனையில் சிச்சை பெற்று வருவதாகவும், நேற்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சாகிர் ஹுசைன் சிகிச்சை பலனின்றி உயரிழிந்துள்ளார்.
ஜாகிர் ஹுசைன் ஏராளமான தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார். 1988ல் பத்மஸ்ரீ, 2002ல் பத்ம பூஷன், 2023ல் பத்ம விபூஷன் ஆகியவை இதில் அடங்கும். 1990ல், இசைத் துறையில் இந்தியாவின் மிக உயர்ந்த அங்கீகாரமான சங்கீத நாடக அகாடமி விருதையும் அவர் பெற்றார்.
உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களுடன் கூட்டாக சேர்ந்து பல இசைக் குழுக்களை நிறுவியவர். ஹாங்காங் சிம்பொனி, நியூஆர்லியன்ஸ் சிம்பொனி ஆகியவற்றிலும் பங்கேற்றுள்ளார். அமெரிக்க இசைக் கலைஞர் பில் லாஸ்வெல்லுடன் இணைந்து ‘தபேலா பீட் சயின்ஸ்’ என்ற பிரம்மாண்ட இசைக் குழுவை நிறுவினார்.
‘வானப்பிரஸ்தம்’ என்ற மலையாளத் திரைப்படத்துக்கு இசையமைத்து, அதில் நடித்தார். இஸ்தான்புல் சர்வதேச திரைப்பட விழா, மும்பை சர்வதேச திரைப்பட விழா, தேசிய திரைப்பட விருது விழா ஆகியவற்றில் இது விருதுகளைக் குவித்தது.
‘இன் கஸ்டடி’, ‘தி மிஸ்டிக் மஸார்’ உட்பட பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். பல திரைப்படங்கள், ஆவணப் படங்களிலும் தனியாகவும் பல்வேறு இசைக் குழுவினருடன் சேர்ந்தும் இசையமைத்துள்ளார். ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றியவர்.
பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ‘ஜாகிர் அண்ட் ஹிஸ் ஃப்ரெண்ட்ஸ்’ திரைப்படமும், ‘தி ஸ்பீக்கிங் ஹேண்ட்: ஜாகிர் உசேன் அண்ட் தி ஆர்ட் ஆஃப் தி இந்தியன் டிரம்’ ஆவணத் திரைப்படமும் பிரபலமானவை.