உலக அளவில் அதிகம் கவனத்தை ஈர்த்த பலஸ்தீனிய தாத்தா கலீத் நபன், நேற்று காலை (16) நுசிராத் அகதிகள் முகாமில் இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்தார்.
கடந்த ஆண்டு நவம்பரில் கலீத் நபன் மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் நடந்த தாக்குதலில் அவரது 3 வயது பேத்தி ரீம் மற்றும் அவரது 5 வயது சகோதரர் தாரிக் கொல்லப்பட்டபோது சர்வதேச ரீதியில் பரவலான கவனத்தை பெற்றார்.
கடந்த ஆண்டு நவம்பரில் தனது பேத்தியின் உயிரற்ற உடலை தழுவியபோது எடுத்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சர்வதேச ஊடகங்களில் வைரலானது. பேத்தியின் மீது அன்பும் துயரமும் கலந்த அவரது உருக்கமான சொற்கள் உலக மக்கள் மனதை நெகிழ்ச்சியடையச் செய்தது.
நபனின் மரணம், பலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் இனப்படுகொலையின் சாட்சியமாகும். கடந்த ஆண்டு தனது குடும்பத்தினரை இழந்த காட்சிகள் மூலம் உலக மக்களின் ஆதங்கத்தைப் பெற்ற நபன், இன்று தனது வாழ்க்கையையும் இழந்துள்ளார்.
மேலும் கலீத் நபனின் மரணம், பலஸ்தீன மக்களின் துயரமான நிலையை மேலும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது. பல்வேறு சர்வதேச அமைப்புகள் இஸ்ரேல்-பலஸ்தீன் மோதல்களை முடிவுக்கு கொண்டு வர கோரிக்கை விடுத்துள்ளன.
இஸ்ரேலின் தாக்குதல்களில் பலியான அப்பாவி உயிர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற நிலையில், நபனின் மரணம், நீதிக்கான மற்றும் மனிதாபிமான போராட்டத்திற்கான ஒரு சின்னமாக மாறியுள்ளது.