ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட, உலகின் 17 நாடுகளுக்கு மேற்பட்ட அரபு நாடுகளிலும் வேறு பல நாடுகளிலும் உத்தியோகபூர்வ மொழியாகவும், முஸ்லிம்கள் பின்பற்றுகின்ற குர்ஆனிய மொழியாகவும், சர்வதேச ரீதியாக தொழில்சார் வர்த்தக ரீதியான மொழியாகவும் இருக்கின்ற பூர்வீக மொழியான அரபு மொழிக்கான சர்வதேச தினம் நாளைய தினம்(18) அனுஷ்டிக்கப்படுகின்றது.
இத்தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையும் அதேபோல உலகின் பல நாடுகளிலும் அரபு மொழி சம்பந்தமான பல நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
நமது நாட்டிலும் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், இத் தினத்தை முன்னிட்டு இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் நகரக்கிளை அரபு எழுத்தணி கண்காட்சியொன்றை இன்று ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் நகரக் கிளையின் தலைவர் அஷ்ஷெய்க். ஜிப்னாஸ் newsnow இடம் பின்வருமாறு தெரிவித்தார்.
“சர்வதேச அரபு மொழித் தினத்தை முன்னிட்டு புத்தளம் மாவட்டத்திலுள்ள 14 அரபு மத்ரஸாக்களில் நிகழ்ச்சிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
இதன் ஒரு நிகழ்வாக அரபு எழுத்தணி போட்டியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்படவுள்ளது. இப்போட்டியில் சுமார் 400 ஆண் பெண் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
இவர்களின் ஆக்கங்களும் இன்றைய தினம் (17) புத்தளம் கலாசார மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் அனைவரும் கலந்துகொண்டு பயன் பெற முடியும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.