வடக்கு சிரியா முழுவதிலும் உள்ள நிலப்பரப்பைக் கிளர்ச்சிப் படைகள் கைப்பற்றிய நிலையில் சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் குடும்பத்துடன் ரஷ்யாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லெபனானில் இஸ்ரேல் போரை நிறுத்துவதாக அறிவித்ததையடுத்து, அமெரிக்கா ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் சிரியாவில் அரசுக்கு எதிரான கலகத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் பக்கத்தில் இருக்கும் நாடு சிரியா. இந்நாட்டில் ஜனாதிபதி அல்-அஸாத் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.
கடந்த 2011ம் ஆண்டு முதல் இங்கு உள்நாட்டு போர் தீவிரமடைந்து வருகிறது. தற்போதைய ஜனாதிபதி ரஷ்யா மற்றும் ஈரான் ஆதரவு பெற்றவர். எனவே இந்த ஆட்சியை கவிழ்த்துவிட்டு, புதிய ஆட்சியை தங்கள் ஆதரவுடன் அமைக்க வேண்டும் அமெரிக்காவும், இஸ்ரேலும் முயன்று வருகின்றன.
இதற்காக ஹயாத் தஹ்ரீா் அல்-ஷாம் (ஹெச்டிஎஸ்) எனும் அமைப்பை இந்நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. இந்த அமைப்பு தொடக்கத்தில் அல்-கொய்தாக்கு ஆதரவு தெரிவிக்க உருவாக்கப்பட்டது. ஆனால், கடந்த 2016ல் அல்-கொய்தாவுடனான உறவை துண்டித்துக்கொள்வதாக அறிவித்தது. அதன் பின்னர் சிரியாவில் உள்ள ரஷ்ய ஆதரவு அரசை அகற்றுவதை நோக்கம் என்று அறிவித்து, அமெரிக்காவுடன் பேசி ஆயுத உதவியுடன் கிளர்ச்சியை தொடங்கியுள்ளது.
இருப்பினும் சிரியாவின் முக்கிய நகரங்களான டமாஸ்கஸ் உள்ளிட்டவை சிரிய அரசு கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. ஆனால் கடந்த 10 நாட்களில் இந்த நிலைமை மாற தொடங்கியுள்ளது. மூன்றாவது பெரிய நகரமான ஹமாவைக் (Hama) கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.
இவர்களின் திடீர் தாக்குதலை எதிர்பாராத ராணுவம் பின்வாங்க தொடங்கியுள்ளது. இப்படியே போனால் விரைவில் முழு நாட்டையும் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிவிடுவார்கள் என சொல்லப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என்று சொல்லப்படுகிறது.