ஜிம்மி கார்ட்டர்: இஸ்ரேலைக் கண்டித்த ஒரே அமெரிக்க ஜனாதிபதி..!

Date:

1977 முதல் 1981 வரை அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ஜிம்மி கார்ட்டர், கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி தனது நூறாவது வயதில் காலமானார்.

பலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேலின் அட்டூழியங்களை கண்டித்த ஒரே அமெரிக்க ஜனாதிபதியாக கார்ட்டர் வரலாற்றில் இடம்பிடித்தார் என்பது அவருடைய தனிசிறப்பாகும்.

2006 ஆம் ஆண்டு கார்ட்டர் எழுதிய நூலில் பலஸ்தீனத்திற்கு ஏற்பட்டு வரும் அநீதிகள் பற்றி அவர் விரிவாகக் விளக்கியிருந்தார்.

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இனப்படுகொலையால் 45,000 க்கும் மேற்பட்ட காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகளே ஆவர்.

கார்ட்டருக்கு முன்னும் பின்னும் பதவி வகித்த அனைத்து ஜனாதிபதிகளும் இஸ்ரேலின் அட்டூழியங்களை முழுமையாக ஆதரித்துள்ளனர், மேலும் இம்மாதம் முடிவடையவிருக்கும் ஜோ பைடன் நிர்வாகம், ஐ.நா. போர் நிறுத்த தீர்மானங்களை வீட்டோ அதிகாரத்தால் தடை செய்து பலஸ்தீனப் படுகொலையை முழுமையாக ஆதரித்து வருவது மட்டுமின்றி இஸ்ரேலுக்கு பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களையும் வழங்கி வருகின்றது.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் முந்திரி தோட்டங்களுக்கு உரிமையாளராக இருந்த ஜிம்மி கார்ட்டர், அமெரிக்காவின் 39 வது ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.

அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மட்டுமல்லாது 1981 இல் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய பின்னரும் பலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை அவர் கைவிடவில்லை.

இதற்காக ‘கார்ட்டர் மையம்’ என்ற அமைப்பையும் அவர் நிறுவினார். எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்த 1979 ஆம் ஆண்டு வெற்றிகரமாக தொடங்கப்பட்ட கேம்ப் டேவிட் சமாதான உடன்படிக்கை அவரது மிக முக்கியமான பங்களிப்பாகும். ஒரு அரபு நாடு இஸ்ரேலை ஒரு முறையான நாடாக அங்கீகரித்த ஒரே மற்றும் கடைசி தடவை அதுவாகும்.

இஸ்ரேலின் வன்முறையை காடர் விமர்சித்து வந்ததால், யூதர்கள் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க அரசியல் கட்சிகளால் கார்ட்டர் கடுமையாக எதிர்க்கப்பட்டார்.

குறிப்பாக, தென்னாப்பிரிக்காவின் வெள்ளை ஆட்சியாளர்களால் அந்நாட்டின் பூர்வீக நீக்ரோக்களுக்கு காட்டிய நிறவெறியுடன் இஸ்ரேலின் மிருகத்தனத்தை கார்ட்டர் ஒப்பிட்டுப் பேசியதற்காக யூத தனவந்தர்கள் மட்டுமன்றி அவரது சொந்த கட்சியான டெமொக்டரிக் கட்சியின் கோபத்திற்கும் அவர் இலக்கானார்.

யூதர்கள் தங்கள் அரசியல் மற்றும் இராணுவ மேலாதிக்கத்தைப் பயன்படுத்தி, பலஸ்தீனத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ குடிமக்கள் மீது கொடுமைகளை மேற்கொண்டு வருவதாக குற்றம் சுமத்திய கார்ட்டர், யூதக் குடியேற்றக்காரர்களை பலஸ்தீனியர்களிடமிருந்து பிரிக்க இஸ்ரேல் திட்டமிட்டு சதிகளை மேற்கொள்வதாகவும் கூறி வந்தார்.

ஒரு யூதக் குடும்பம் ஜெருசலேமில் இருந்து மேற்குக் கரையில் உள்ள அவர்களது வீட்டிற்குச் செல்ல முடிந்தபோதிலும் அதே பாதைய பயன்படுத்தி பலஸ்தீனர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்ததையும் கார்ட்டர் வெளிப்படுத்தினார்.

அரபிகளின் அன்றாட வாழ்க்கையின் எந்த அம்சத்தைப் பற்றியும் யூதர்கள் அறிந்து அவர்களுடன் அந்நியோன்னியம் ஏற்பட இஸ்ரேல் இடம் தரவில்லை என்றும் கார்ட்டர் தனது நூலில் குறிப்பிட்டிருந்தார்.

மேற்குக் கரையில் கட்டப்பட்ட சுவர்கள் மற்றும் சோதனைச் சாவடிகள் பலஸ்தீனியர்களின் இயல்பான வாழ்க்கையைப் பறித்துவிட்டதாகவும், பலஸ்தீனியர்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் கூட இல்லை என்றும், அவர்களின் நிலங்கள் மற்றும் சொத்துக்கள் இஸ்ரேலால் அபகரிக்கப்படுவதாகவும், பின்னர் அங்கு யூதர்களின் குடியிருப்புகள் உருவாக்கப்படுவதாகவும் அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பலஸ்தீனரகள் அவர்களுடைய சொந்த மண்ணின் வளங்களை அணுகுவதற்குக் கூட இஸ்ரேல் தடை விதித்திருந்ததாகவும் கார்ட்டர் தனது புத்தகத்தில் வெளிப்படுத்தினார்.

மேற்குக் கரையில் உள்ள மூன்று மில்லியன் பலஸ்தீனர்கள் ஃபத்தா ஆதரவுடைய பலஸ்தீன அதிகார சபையின் கீழ் வாழ்கின்ற போதிலும் முழுக்கட்டுப்பாடு இஸ்ரேலிய இராணுவத்திடமே இருப்பதாகவும், பலஸ்தீன அதிகார சபைக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதானவும், பலஸ்தீனர்களுக்கு வேலை வாய்ப்புகள் அரிதாகவே உள்ளதாகவும் கார்ட்டர் குறிப்பிட்டிருந்தார்.

ஹமாஸ் அமைப்புடனான கார்ட்டரின் உறவுகள்

பல மேற்கத்திய தலைவர்களைப் போலல்லாமல், ஃபத்தா ஆதரவுடைய பலஸ்தீன அதிகார சபையை தோற்கடித்து 2006 இல் காசா பகுதியின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய பலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸுடன் உறவுகளைப் பேணுவதற்கு கார்ட்டர் துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்தார்.

அமெரிக்காவும் ஏனைய பல ஐரோப்பிய நாடுகளும் ஹமாஸை ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்திருந்த நிலையில், ஹமாஸை அமைதிப் பேச்சுவார்த்தையில் இருந்து விலக்குவது ஒரு விரிவான தீர்மானத்திற்கான வாய்ப்புகளை பாழாக்கி விடும் என கார்ட்டர் வலியுறுத்தி வந்தார்.

பாலஸ்தீனத்தின் நிலைமையை ஒரு சர்வதேச பார்வையாளராக காடர் மையம் கண்காணித்து வந்ததுடன் 2006 தேர்தலில் ஹமாஸ் வேட்பாளர்களை ஃபத்தா உறுப்பினர்கள் கூட முழுமையாக ஆதரித்தது வந்தனர் என்பதை உலகிற்கு அவர் விளக்கினர்.

அந்தத் தேர்தலை சீர்குலைக்க இஸ்ரேல் சதி செய்த போதிலும் அவை அனைத்தையும் மீறி தேர்தல் நடத்தப்பட்டு ஹமாஸ் அமைப்பும் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

பின்னர், 2008 இல் காடர் தனது அரசியல் எதிர்காலத்தையே பணயம் வைத்து ஹமாஸுடன் சமாதானப் பேச்சுக்களை நடத்தினார்.

2009 ஆண்டு ஒரு செய்தியாளர் சந்திப்பில், ஹமாஸ் தலைவர்கள் தமக்கு முன்வைத்த ஒரே கோரிக்கை காஸா மக்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதுதான் என்று கார்ட்டர் கூறினார்.

பலஸ்தீனர்களுக்கு எதிரான வன்முறைக்கு அமெரிக்காவின் பூரண ஆதரவு
பலஸ்தீன ஆக்கிரமிப்பை ஆதரிப்பதற்காக வெள்ளை மாளிகையையும் அமெரிக்க மக்களையும் கார்ட்டர் அடிக்கடி விமர்சித்து வந்தார்.

மேலும் இஸ்ரேலின் சட்டவிரோத முடிவுகளை அமெரிக்கா அரிதாகவே கேள்விக்குள்ளாக்குவதாக குற்றம்சாட்டிய கார்ட்டர், பல அமெரிக்கர்களுக்கு பலஸ்தீனியர்களின் துன்பம் பற்றி தெரியாது என்றும் அங்கலாய்த்து வந்தார்.

மேலும், 2006 இல் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தான் பலஸ்தீனம் விடயத்தில் நெகிழ்வாக இருக்கப் போவதாக அறிவித்தால், அவர் ஒரு போதும் தேர்தலில் வெற்றி பெறவே முடியாத அளவு அமெரிக்க அரசியலில் பலமிக்க யூத செல்வந்தர்கள் ஆதிக்கம் செலுத்துவதாகவும் கார்ட்டர் கூறி வந்தார்.

2017 ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்து, அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவில் இருந்து ஜெருசலேமுக்கு மாற்றிய போது, கார்ட்டர் அதை கடுமையாக கண்டித்தார்.

சர்வதேச சமூகம் ஜெருசலேமை பலஸ்தீனத்திற்கு சொந்தமான பூமியாகவே கருதுகின்றது.

பலஸ்தீனர்களின் அனுமதியின்றி கிழக்கு ஜெருசலேமின் நிர்வாக அந்தஸ்தை மாற்றுவது, அமைதிக்கான அனைத்து வாய்ப்புகளையும் பாதிக்கும் என்று கூறிய காடர், கிழக்கு ஜெருசலேமை பாலஸ்தீனியர்களின் சொந்த சுதந்திர தேச ஆசையின் ஒரு சின்னம் என வர்ணித்தர்.

Source: TRT WORLD

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...