தென்கொரியா முவான் விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளது.
தென் கொரியாவை சேர்ந்த விமான சேவை நிறுவனமான ஜேஜூ (Jeju) விமான நிறுவனத்தின் 7C2216 என்ற விமானமானது இன்று (29) 175 பயணிகள், 6 விமான ஊழியர்களுடன் தாய்லாந்து நாட்டில் இருந்து தென் கொரியாவின் முவான் (Muan ) விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது.
அப்போது ஓடு பாதையில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகி விமான நிலைய தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் விமானம் வெடித்து சிதறும் கோர காட்சி காண்போரை பதைபதைக்க செய்கிறது.
இந்த பயங்கர விபத்தில், முதற்கட்டமாக 28 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது . ஆனால், காலை 7.30 மணியில் இருந்து மீட்புப்பணிகள் தொடர்ந்ததால் பலி எண்ணிக்கை இன்னும் உயரும் என கூறப்பட்டது.
அதேபோல, காலை 9 மணி நிலவரப்படி, விமானத்தில் பயணித்த 175 + 6 பேரில், இதுவரை 85 பேர் உயிரிழந்ததாக தென் கொரிய தீயணைப்பு (மீட்பு) துறை தெரிவித்ததாக தனியார் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
தென் கொரியா, முவான் சர்வதேச விமான நிலையத்தில் இன்று விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த 175 பயணிகளில் 2 பேர் தாய்லாந்து நாட்டவர்கள் எனவும், 6 பணியாளர்களும் பயணித்ததாக தென் கொரியா போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.