பாராளுமன்ற தேர்தலில் வரவு – செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் ஆவணங்களை உடனடியாக பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்புமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்பின்னர், பொலிஸாரினால் உரிய நடவடிக்கை எடுக்க முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நவம்பர் 14இல், நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 8,361 வேட்பாளர்களில் 7,412 பேர் மாத்திரமே வரவு -செலவு விபரங்களைக் கையளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சுயேச்சை குழுக்களாகப் போட்டியிட்ட 197 வேட்பாளர்கள் இன்னும் அறிக்கையைக் கையளிக்கவில்லை. வருமானம் மற்றும் செலவு விபரங்களைக் கையளிப்பதற்கான காலம் நிறைவு பெற்றது.
உரிய வரவு – செலவு அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ள வேட்பாளர்களின் அறிக்கையின் தகவல்கள் தொடர்பில், ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் அது குறித்தும் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.