நுரைச்சோலை மாம்புரி பிரதேசத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 16, 22, 29 வயதுடைய புத்தளம், பழைய மன்னார் வீதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாம்புரி பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வந்த விழா மண்டபத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை தனியார் ஒப்பந்ததாரர் ஒருவர் பெற்றுக் கொண்டு கொத்தனார் மற்றும் தச்சர்களை பணிக்கு அமர்த்தி குறித்த நிர்மாணப் பணிகளை முன்னெடுத்து வந்த வேளையில், நேற்று (29) ஞாயிற்றுக்கிழமை) மாலை மின்சாரம் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதன்போது 4 பேர் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், மின்சாரத்தை பெறுவதற்கான மின்கம்பியில் ஏற்பட்ட மின்னொழுக்கின் காரணமாக, மின்சாரம் தாக்கியதில் ஒருவர் அதிலிருந்து வீசப்பட்டு கீழே வீழ்ந்துள்ளார்.
எனினும் ஏனைய 3 பேரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தமை பொலிஸாரின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மின்சாரம் தாக்கியவர்களை புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர்கள் மூவரும் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
உயிரிழந்த தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கிய போது பணியின் போதான அடிப்படை பாதுகாப்பு விடயங்களை பின்பற்றவில்லையெனவும், உரிய காலணிகள், கையுறைகள் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை பயன்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பில் புத்தளம் தலைமையக பொலிஸாரும், நுரைச்சோலை பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மூலம்: தினகரன்