சிரியாவின் பஷார் அல் ஆசாதினுடைய கொடுங்கோல் ஆட்சி வீழ்ச்சியடைந்ததையிட்டு அங்குள்ள மக்கள் சுதந்திர காற்றை தற்போது அனுபவிக்க தொடங்கியிருக்கின்றார்கள்.
இச்சூழ்நிலையில் ஆசாதினுடைய ஆட்சிக்காலத்தில் அவருடைய ஆட்சிக்கு எதிராக நடந்துகொண்டதற்கும் கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டுகளின் பேரிலும் இலட்சக்கணக்கான பொதுமக்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள், கொல்லப்பட்டிருக்கிறார்கள், சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
பல்லாண்டு காலமாக பலருடைய தகவல்கள் தெரியாமலும் அவர்களுக்கு என்ன நடந்துள்ளது என்று தெரியாமலேயே இருந்தன.
இப்போது பொதுமக்களும் போராளிகளும் தற்போது ஆசாதினுடைய ஆட்சியில் பயன்படுத்தப்பட்டு வந்த சிறைச்சாலைகளை திறந்து அதில் கைதிகளாக அடைக்கப்பட்டிருந்தவர்களை விடுதலை செய்கின்ற காட்சிகளை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
இந்த வகையில் சைட்னாயா என்ற பிரபலமான சிறைக்கூடத்தில் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள் எவ்வாறெல்லாம் சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதனை நேரடியாகவே தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் அங்குள்ள சிறைச்சாலை உள்ளக காட்சிகள் அமைந்துள்ளன.
பார்ப்பதற்கு மெய்சிலிர்க்க வைக்கின்ற மிகப்பயங்கரமான சித்தரவதைகள் நடந்திருப்பதை அந்த சிறைச்சாலையில் காண்பிக்கப்பட்டுள்ளன.
கீழே காட்டப்பட்டுள்ள படங்களில் உள்ள காட்சிகள் மரங்களை ஒன்றோடு ஒன்று இணைப்பதற்கு பயன்படுத்தப்படுகின்ற கருவிகளை வைத்து கைதிகளின் உடல்களை நொருக்கியுள்ளதை பார்க்கக்கூடியதாகவும் , தூக்கு கயிறுகளில் இரத்தம் தோய்ந்த வகையிலும் நிறைய அங்கே காணக்கூடியதாக இருக்கின்றன.இப்படி பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அங்கிருந்து வரும் தகவல்கள் வெளிவருகின்றன.
அதே நேரத்தில் இன்னும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் மேலும் சில அமைப்புகள் சைட்னயாவை ஒரு மரண முகாம் என்று வர்ணிக்கின்றன; மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம், சைட்னாயாவில் மட்டும் 30,000 கைதிகள் கொல்லப்பட்டதாக மதிப்பிட்டுள்ளது
இந்தாண்டு வெளியான ஐநாவின் அறிக்கையின்படி, சைட்னாயா சிறை மனிதர்கள் உயிர் வாழ முடியாத அளவுக்கு அசுத்தமாகவும், ஆபத்தானதாகவும் இருப்பதாக விவரித்திருந்தது.
சிவப்பு கட்டிடத்தில் இருக்கும் கைதிகளுக்கு வெவ்வேறு விதமான சித்திரவதைகள் கொடுக்கப்படுகிறது; கைதிகள் உயிர்வாழ சில நேரங்களில் தங்கள் சிறுநீரை குடிக்க வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
கடந்த 2011 மற்றும் 2018க்கு இடையில் 30,000க்கும் மேற்பட்ட கைதிகள் தூக்கிலிடப்பட்டுள்ளனர் அல்லது சித்திரவதை செய்யப்பட்டு, மருத்துவ பராமரிப்பு இல்லாமல் அல்லது பட்டினியால் இறந்துள்ளனர் என்று உரிமைக் குழுக்களால் மதிப்பிடப்பட்டுள்ளது.
விடுவிக்கப்பட்ட சில கைதிகளின் சாட்சியங்களின் அடிப்படையில், 2018 மற்றும் 2021க்கு இடையில் குறைந்தது 500 கைதிகள் தூக்கிலிடப்பட்டதாக அசோசியேஷன் ஆஃப் தி மிஸ்ஸிங் அண்ட் டீடெய்னிஸ் இன் செட்னயா (Association of the Missing and Detainees in Saydnaya Prison (AMDSP) 2022) கூறியது.
கடந்த 2017ஆம் ஆண்டில், கொல்லப்பட்ட கைதிகளின் பொருட்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் அந்த இடத்தில் தகனக் கூடத்தைக் கட்டியிருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியது.