தமது அரசாங்கத்தில் எந்த மட்டத்தில் இருந்தாலும் தவறு செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எந்த வகையிலும் உடைக்க இடமளிக்க மாட்டோம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க ஊடகப் பிரதானிகளுடன் இன்று (13) முற்பகல் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக இந்நாட்டு மக்கள் வெவ்வேறு அரசாங்கங்களை உருவாக்கி வெவ்வேறு அரசாங்கங்களை கவிழ்த்துள்ளனர்.
வரலாற்றில் முதன்முறையாக இரண்டு தடவைகள் இந்த நாட்டு மக்களால் எமக்கும் தேசிய மக்கள் படைக்கும் வழங்கப்பட்ட வரலாற்று ஆணையின் பொருள் மற்றும் உட்பொருளைப் பற்றிய விரிவான வாசிப்பை இம்முறை பெற்றுள்ளோம்.
தரப்படுத்தப்பட்ட நிலையான நாடு உருவாகும் என்ற நம்பிக்கையில் இந்த நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசை உருவாக்கினர்.
அந்த தனித்துவமான நம்பிக்கைக்கு எந்தத் தீங்கும் ஏற்படுவதை எங்கள் அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது.
நாட்டில் தவறு செய்பவர்களை, எக்காரணம் கொண்டும் பாதுகாக்க எமது அரசாங்கம் தயாராக இல்லை. நாட்டில் மட்டுமல்ல, நமது அரசாங்கத்தில் எந்த நிலையிலும் யாராவது தவறு செய்தால், அந்தத் தவறுக்கு நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம்.
7 தசாப்தங்களாக ஏமாற்றப்பட்ட மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்தி இந்த நாட்டை சிறந்த நாடாக மாற்றுவதற்கு தமது அரசாங்கம் நிபந்தனையற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார மற்றும் அரச ஊடகப் பிரதானிகளின் பங்குபற்றுதலுடன் இந்த சந்திப்பு இடம்பெற்றது.