வறுமையில் உள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் பாடசாலை தவணை காலப்பகுதியில் 6000 ரூபா விசேட கொடுப்பனவு வழங்கப்படும் என சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடனம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மெலும், காலநிலை சீர்கேட்டினால் முழு நாடும் பாதிக்கப்பட்டுள்ளது. இடர்களினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவித்துக்கொள்வதுடன், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிவாரணம் வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தேசிய உற்பத்திகளை அடிப்படையாகக் கொண்டு பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு ஏக்கர் விவசாய பயிர்ச்செய்கைக்கு 25 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரிசி தட்டுப்பாட்டுக்கு வெகுவிரைவில் தீர்வு எட்டப்படும். ஆகவே அரிசி விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
பொருளாதார பாதிப்பினால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 55 சதவீதமான மாணவர்களின் கல்வி உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. 53.2 மாணவர்கள் பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்வதை வரையறுத்துள்ளார்கள். 29.1 சதவீதமான மாணவர்கள் பழைய புத்தகங்களையும்இ கொப்பிகளையும் பயன்படுத்துகிறார்கள்.
மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் ஊடாக கொடுப்பனவுகளை பெறும் குடும்பங்களில் உள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக அடுத்த ஆண்டு முதல் பாடசாலை தவணை காலப்பகுதியில் 6000 ரூபா விசேட கொடுப்பனவு வழங்கப்படும். அதேபோல் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களின் மாணவர்களுக்கும் இந்த 6000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.
அஸ்வெசும நலன்புரி திட்ட கொடுப்பனவு தொகுதியில் முதல் தொகுதியில் இருந்த 4 இலட்ச பயனாளர்களுக்கான கொடுப்பனவை இம்மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவுப்படுத்த கடந்த அரசாங்கம் தீர்மானித்திருந்தது. இந்த பயனாளர்களுக்கான கொடுப்பனவை எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை வழங்கவும், இரண்டாம் தொகுதியில் உள்ள பயனாளர்களுக்கான கொடுப்பனவை 2025 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை வழங்கவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அதேபோல் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு தற்போது வழங்கப்படும் 8500 ரூபா கொடுப்பனவை 10000 ரூபாவாகவும், மிக ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் 15000 ரூபாவை 17500 ரூபாவாக அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டம் இரத்து செய்யப்படும் என்று முன்வைத்த குற்றச்சாட்டை தோற்கடித்துள்ளோம்.
மருந்து கொள்வனவில் பிரச்சினை காணப்படுகிறது. தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையில் முறைகேடுகள் காணப்படுகிறது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். வெகுவிரைவில் மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்றார்.