பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்க உறுதியாக இருப்பதாகத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இனவாதத்தைத் தூண்டும் எந்தவொரு முயற்சிகளையும் தடுக்க தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அமுல்படுத்த அரசாங்கம் தயங்காது எனத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக பாவனையாளர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் நேற்று (03) அமைச்சரவையின் தீர்மானத்தை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நாட்டில் இனவாதம் மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்களுக்கு தீர்வு காண பயங்கரவாத தடைச் சட்டம் போன்ற தற்போதைய சட்டங்களை அரசாங்கம் தொடர்ந்து அமுல்படுத்த வேண்டும்.
இன, மத வேறுபாடின்றி மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளதாகவும், எமது அரசாங்கத்தின் கீழ் தீவிரவாதம் வளர ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘தீவிரவாதம் வன்முறைக்கு வழிவகுக்கும், அதை நாங்கள் அனுமதிக்க முடியாது. புதிய சட்டங்கள் இயற்றப்படும் வரை, தற்போதுள்ள சட்ட கட்டமைப்பைப் பயன்படுத்தி விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை என நிரூபிக்கப்பட்டால், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு அரசாங்கம் புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தும் என்று அவர் மேலும் கூறினார்.
இருப்பினும், பேச்சு சுதந்திரத்தை குறைக்க இந்த சட்டங்கள் பயன்படுத்தப்படாது என்று அவர் உறுதியளித்தார். கருத்துச் சுதந்திரம் அனைவருக்கும் உள்ளது, ஆனால் இதில் இனவாதத்தையோ தீவிரவாதத்தையோ ஊக்குவிப்பதாக இருக்கக்கூடாது’ என்றும் அவர் கூறினார்.