சென்னையில் 48-வது புத்தக கண்காட்சியானது டிசம்பர் மாதம் 27ஆம் திகதி தொடங்கி ஜனவரி 12 திகதி நடைபெறவுள்ளது.
வருடந்தோறும் சென்னையில் நடைபெறும் புத்தக திருவிழா மிகவும் புகழ்பெற்றது. தமிழகமெங்கும் உள்ள வாசகர்களுக்கு சென்னை புத்தக திருவிழா வரப்பிரசாதமென்றே சொல்லலாம். கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரங்குகளோடு நடைபெறும்.
தமிழகம் முழுக்க உள்ள புத்தகப்பிரியர்கள் சென்னை வந்து புத்தக திருவிழாவில் பங்கு கொள்வார்கள். இந்த நிலையில் புத்தக திருவிழாவிற்கான திகதி பபாசி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தக கண்காட்சி நுழைவு கட்டணம் 10 ரூபாய், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அனுமதி இலவசம். பொங்கலுக்கு முன்னதாக இந்த புத்தக கண்காட்சியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த புத்தக கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் துவக்கி வைக்கின்றனர். துவக்க நிகழ்ச்சியில் எழுத்தாளர்களுக்கு கலைஞர் பொற்கிழி விருதுகளை துணை முதலமைச்சர் வழங்க உள்ளார்.
புத்தகக் காட்சியானது விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடைபெறும்.
மொத்தம் 17 நாட்கள் நடக்கும் புத்தகக் காட்சியில் 900 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. எல்லா புத்தகங்களும் 10% தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
2 லட்சம் சதுரஅடி பரப்பளவில், புத்தக காட்சிக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கடந்த ஆண்டு 20 கோடி ரூபாய்க்கும் அதிக புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அதைவிட கூடுதல் தொகைக்கு விற்பனையாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது