இலங்கை வரலாற்றில் மாறா வடுவாக பேரழிவை ஏற்படுத்திய சுனாமி அனர்த்தத்தை எதிர்கொண்டு 20 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் நாடாளவிய ரீதியில் விசேட நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அந்தவகையில் தற்போது 20 வயதாகின்ற ‘சுனாமி பேபி அபிலாஷ்’ அவரது இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூபிக்கு முன்பாக ஆழிப்பேரலையால் உயிர் நீத்த உறவுகளுக்காக தனது அஞ்சலியை வியாழக்கிழமை (26) செலுத்தினார்.
சுனாமி அனர்த்தத்தினால் பெரலிய ரயில் நிலையத்துக்கருகில் விபத்திற்குள்ளான ரயிலில் பயணித்த பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்களை நினைவுகூரி நேற்று (26) காலை 6.50 மணியளவில் கொழும்பு கோட்டையிலிருந்து பெலியத்த வரை விசேட ரயில் ஒன்று இயக்கப்பட்டது.
பெரலிய ரயில் நிலையத்துக்கருகில் அனர்த்தத்துக்குள்ளான ரயில் என்ஜினை பயன்படுத்தி நேற்றைய தினம் இந்த ரயில் இயக்கப்பட்டமை விசேட அம்சமாகும். இதன்போது, நினைவிடத்தில் பயணிகளுடன் ரயில்வே ஊழியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. மட்டக்களப்பு கல்லடி டச்பார் திருச்செந்தூர் நாவலடி மற்றும் புது முகத்துவாரம் ஆகிய பகுதிகளில் அதிக உறவுகள் காவு கொள்ளப்பட்டன. அதன் நினைவாக அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூபிகளில் சமய வழிபாடுகளும் இடம்பெற்றன.
கல்முனை ஆதார வைத்தியசாலையிலும் சுனாமியில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்தனர். வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி மருத்துவர் குணசிங்கம் சுகுணன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்தியசாலை ஊழியர்களும் கலந்துகொண்டு மலர் அஞ்சலியும் மௌன அஞ்சியும் நிகழ்த்தப்பட்டது.
வவுனியா கோவில் குளம் அகிலாண்டேஸ்வரர் ஆலயத்தில் சுனாமியில் உயிழந்தவர்களும் விசேட வழிபாடும் அஞ்சலியும் இடம்பெற்றது. வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் மற்றும் அகிலாண்டேஸ்வர் ஆலய தர்ம கர்த்தா சபையும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.
முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் உணர்வெழுச்சியுடன் சுனாமி நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது உயிரிழந்தவர்களின் உறவுகள் கதறி அழுது கண்ணீர் மல்க, தமது உயிரிழந்த உறவுகளுக்கு மலர் தூவி, தீபமேற்றி, உணவுப்பொருட்களைப் படையலிட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலிகளை மேற்கொண்டனர்.
யாழ்ப்பாணம் வடமராட்சி உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் 20 ஆண்டு சுனாமி நினைவேந்தவல் நிகழ்வு இடம்பெற்றது.
யாழ் மாவட்ட செயலகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அலுவலகத்தின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெறற நிகழ்வில் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கலந்துகொண்டார். ஆத்ம சாந்திக்காக 2 நிமிட மௌன அஞ்சலியும் அகல் விளக்கும் ஏற்றப்பட்டது.
சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் தேசிய பாதுகாப்பு தினம் மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில் சர்வமதத் தலைவர்களின் பிரார்த்தனைகளும் இடம்பெற்றது.