முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் அமைச்சரவையில் சமூகங்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்- கலாநிதி ஜெகான் பெரேரா

Date:

-கலாநிதி ஜெகான் பெரேரா

புதிய பாராளுமன்றத்தின் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து தனது அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையை நிகழ்த்திய ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க பெரும்பாலும் பொருளாதாரத்தை பற்றியும் குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை பற்றியுமே பேசினார்.

முன்னைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் இணங்கிக்கொண்ட நிபந்தனைகள் அவருக்கு பிரச்சினையாக இருக்கின்றன. மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை பற்றி சிந்திக்காமல் நிதியியல் இலக்குகளை அடைவதற்கு முன்னுரிமை கொடுத்து அந்த அரசாங்கம் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டது.

திசையை மாற்றமுடியாத அளவுக்கு சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை நீண்டதூரம் சென்றுவிட்டதால் அதை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதை தவிர வேறு மாற்றுவழி அரசாங்கததுக்கு இல்லை என்பதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

இரண்டு வருடங்களுக்கும் கூடுதலாக பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுவிட்டன. ஒரு நீடித்த காலத்துக்கான மறுசீரமைப்பு செயற்திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நாம் மீண்டும் ஆரம்பிப்பதானால் பொருளாதாரத்தை முனானோக்கி நகர்த்துவது எமக்கு சாத்தியமில்லாமல் போகும் ‘ என்று அவர் கூறினார்.

முன்னைய அரசாங்கம் நாட்டை ஒரு இறுக்கமான சூழ்நிலைக்குள் தள்ளிவிட்டதால், சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை மீளப் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தி வறிய மக்களுக்கு வாய்ப்பான நிலைமையை ஏற்படுத்துவதாக தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதியை அரசாங்கத்தினால் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுக்கமுடியாமல் இருக்கிறது.

கடந்த இரண்டு வருடங்களாக வறுமை மட்டம் இரண்டு மடங்காகி மக்களின் இடர்பாடுகள் அதிகரித்திருக்கும் நிலையில்,பொருளாதார உறுதிப்பாட்டை இடருக்குள்ளாக்காமல் சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை தொடரவேண்டியது அரசாஙகத்துக்கு அவசியமாகிறது.

பொருளாதாரத்தை பொறுத்தவரை, நாடு மிகவும் சிக்கலான நிலையில் இருப்பதுடன் அரசாங்கமும் புதிய ஒன்றாக இருப்பதால்,  மத்தியமயப்படுத்தப்பட்ட ஒரு முறையில் தீர்மானங்களை எடுப்பதிலேயே அது நாட்டம் காட்டும். அரசாங்கத்தின் மையக்குழுவாக மார்க்சிய கோட்பாட்டைப் பின்பற்றும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) இருப்பது இந்த மத்தியமயப் போக்கிற்கு வலுச் சேர்ப்பதாக அமையும்.

அதன் பிரகாரம் அரசாங்கம் இனம், மதம் அல்லது பிராந்தியத்துக்கு ஒரு இடங்கொடுப்பதை விடவும் ஒரு மத்தியமய நோக்கிலேயே பொருளாதார பிரச்சினைகளை கையாளுவதற்கு முன்னுரிமை கொடுக்கும்.

அரசாங்க அமைச்சர்களை தெரிவுசெய்த முறையில் இந்த மத்தியமய மற்றும் ஒரேமாதிரியான அம்சத்தைக் காணக்கூடியதாக இருக்கிறது. இனம், மதம் அல்லது பிராந்தியம் போன்ற ஏனைய பண்பும் கூறுகளுக்கு மேலாக கட்சி உறுப்புரிமைக்கே அரசாங்கம் கூடுதல் முக்கியத்துவத்தை கொடுத்திருக்கிறது.

இனவாதமற்ற சமுதாயம் ஒன்றை உருவாக்கப்போவதாக ஜனாதிபதி சூளுரைத்திருக்கிறார். ‘ மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும் இனவாத அரசியல் இந்த நாட்டில் மீண்டும் தலையெடுக்க நாம் அனுமதிக்கப் போவதில்லை.

அதேபோன்றே எந்த வடிவிலான மதத் தீவிரவாதமும் வேர்விடுவதற்கு அனுமதிக்கப் போவதில்லை. இனமோதல்களினால் எமது தேசம் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து விட்டது ‘ என்று அவர் கூறினார்.

ஆனால், எல்லோருக்கும் ஒரே மாதிரியான கொள்கைகளும் அணுகுமுறைகளும் நாட்டின் வேறுபட்ட பிராந்தியங்களில் வாழும் வெவ்வேறு இனங்களையும் மதங்களையும் சேர்ந்த மக்கள் எதிர்நோக்கக்கூடிய பிரத்தியேகமான பிரச்சினைகளை கருத்தில் எடுக்கத்தவறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

மன்னார் வெளிப்படுத்தல்கள்

மன்னாரில் தற்போது மக்களின் மிகவும் முக்கிய கரிசனைக்குரியவையாக இருப்பவை பொருளாதாரப் பிரச்சினைகளேயாகும். அந்த முன்னுரிமை கொடுத்து அவற்றை கையாளவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் விரும்புகிறார்கள்.

கடந்த வாரம் மன்னாரில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் மூன்று பிரச்சினைகள் குறித்து கவனத்துக்கு கொணடு வரப்பட்டது. அதான் குழுமத்தின் காற்றாலை மின் உற்பத்தி திட்டம், அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்டியங்கும் கம்பனி ஒன்று கனிமங்களுக்காக மேற்கொள்ளும் மண் அகழ்வு, புத்தளம் — மன்னார் வீதியை தரமுயர்த்தல் ஆகியவையே அந்த பிரச்சினைகளாகும்.

அதானி குழுமத்தினதும் அவுஸ்திரேலிய கம்பனியினதும் திட்டங்கள் மன்னார் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியவை என்பதுடன் கடல் மட்டம் அதிகரிக்கும் நிலையில் மக்களின் உயர்வாழ்வுக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியவை என்பது கூட்டத்தில் பங்கேற்ற சிவில் சமூக உறுப்பினர்களின் நிரைப்பாடாக இருந்தது. காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தின் விளைவாக சுற்றுலாத்துறையும் கடற்தொழிலும் பாதிக்கப்படக்கூடிய ஆபத்து இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த இரு திட்டங்களின் விளைவாகவும் நீண்ட காலத்தில் ஏற்படக்கூடிய எதிர்மறையான விளைவுகள் குறித்து வெளிநாட்டு துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய சுயாதீனமான சுற்றுச்சூழல் மதிப்பீடு ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுந்தனர்.

இந்த திட்டங்களுக்கான அனுமதிகள் அந்த பகுதி மக்களின் குறைந்தபட்ச பக்களிப்புடனேயே அரசாங்கத்தனால் பெறப்பட்டிருக்கிறது என்ற விரக்தி காணப்படுகிறது. அதானி குழுமத்தின் திட்டமும் அவுஸ்திரேலிய கம்பனி திட்டமும் அந்த பகுதி மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதுடன் நீண்டகால அடிப்படையில் அவர்களது கடற்தொழிலுக்கும் விவசாயத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவையுமாகும்.

இந்த திட்டங்களினால் தங்களது பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படும் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால்இ நிர்மாணத்துக்காகவும் அகழ்வுக்காகவும் கொழும்பில் அனுமதி வழங்கப்ப்டதால் அவற்றை தடுப்பதற்கு மன்னார் மக்களினால் எதையும் செய்ய முடியாமல் இருக்கிறது. இந்த திட்டங்கள் தங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தப்போகின்ற அதேவேளைஇ அவற்றின் பயன்களை மன்னாருக்கு வெளியில் உள்ளவர்களே அனுபவிக்கப் போகிறார்கள் என்று மன்னார் மக்கள் உணருகிறார்கள்.

குறிப்பாக இந்த திட்டங்களில் உயர்மட்டங்களில் தொழில் வாய்ப்புக்ளைை வெளியாரே பெறப்போகிறார்கள் என்பது அவர்களது கவலையாக இருக்கிறது. பாதிக்கப்படுகின்ற மக்களின் கருத்துக்களை அறியாமல் கொழும்பில் இருந்து அங்கீகாரம் வழஙகப்பட்டிருப்பதாக அவர்கள் விரக்தி அடைந்திருக்கிறார்கள்.

கலந்துரையாடலில் பங்கேற்றவர்கள் இந்த பிரச்சினைகளுக்கு மேலதிகமாக வேறு பிரச்சினைகள் குறித்தும் கவனத்துக்கு கொண்டுவந்தனர். அவற்றில் முக்கியமானது நீண்டகால நிலப் பிரச்சினையாகும். போர்க்காலத்தில் சில கிராமங்களையே முழுமையாக கையகப்படுத்திய இராணுவம் தொடர்ந்தும் அவற்றை அதன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

அந்த கிராமங்கள் இப்போது இராணுவ முகாமாக இருக்கிறது. அவற்றின் மக்கள் வெளியிடங்களில் வாழ்கிறார்கள். தாங்கள் வெளியிடங்களில் தற்காலிக தங்குமிடங்களில் வாழும்போது தங்களது வீடுகளை இராணும் ஆக்கிரமித்திருப்பதை அந்த மக்கள் காண்கிறார்கள்.

உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து பதினைந்து வருடங்களுக்கும் அதிகமான காலம் கடந்துவிட்ட போதிலும் கூட பல கிராமங்கள் இன்னமும் முழுமையாக அல்லது பகுதியாக இராணுவத்தின் ஆக்கிரமிப்பின் கீழேயே இருக்கின்றன. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் கவனம் செலுத்துவதாக புதிய அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது. இந்த பிரச்சினைகளை உரியமுறையில் கையாளுவதற்கு அவை குறித்து அமைச்சரவையால் உள்ளவர்கள் குரல் கொடுக்கவேண்டியது அவசியமாகிறது.

உள்ளக பிரதிநிதித்துவம்

அமைச்சரவை உறுப்பினர்களை தெரிவு செய்ததில் தேசிய மக்கள் சக்தி நீண்டகாலமாக விசுவாசமான் கட்சி உறுப்பினர்களாக செயற்பட்ட அதன் உறுப்பினர்களுக்கே முன்னுரிமை கொடுத்திருக்கிறது.

தங்களது உறுப்பினர்களை வைத்தே நாட்டை ஆட்சி செய்யவேண்டும் என்ற நிலைப்பாட்டை கட்சி எடுத்திருக்கிறது. வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் விட்டுக் கொடுப்புக்களைச் செய்யவேண்டிய தேவை இருக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

அமைச்சரவையில் புதிய உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தேவையான கல்வி மற்றும் முகாமைத்துவ தகைமைகளை கொண்டிருக்கிறார்கள். நற்பெயரைச் சம்பாதித்த பல கல்விமான்ககளையும் டாக்டர்களையும் அமைச்சரவை கொண்டிருக்கிறது.

ஆனால், இலங்கை போன்ற பல இனங்கள், மதங்களைக் கொண்ட இலங்கை போன்ற பன்முக சமுதாயம் ஒன்றில் அதுவும் இனத்துவமும் மதமும் பெரிய மோதல்களுக்கு காரணமாக இருந்த ஒரு நாட்டில் பிரதிநிதித்துவத்தில் ஒரு சமநிலை பேணப்படவேண்டிய முக்கியத்துவத்தை மனதில் கொண்டிருப்பது அவசியமாகும்.

கல்விமான்கள் நாடு எதி்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதற்கு செய்திருக்கக்கூடிய பங்களிப்புகளை விடவும் அந்த பிரச்சினைகளின் ஒரு பகுதியாகவே பெரும்பாலும் இருந்து வந்திருக்கிறார்கள் என்பதை மறந்து விடமுடியாது.

21 உறுப்பினர்களைக் கொண்ட, ஒப்பீட்டளவில் சிறியதாக அமைந்திருக்கும் தேசிய மக்கள் சக்தி அமைச்சரவை பாராட்டுக்குரியது. முன்னைய அரசாங்கங்கள் இதை விடவும் இரண்டு மடங்குக்கும் கூடுதலான உறுப்பினர்களுடனான அமைச்சரவையை கொண்டிருந்தன. அதனால் செலவினங்கள் உயர்ந்ததுடன் கட்டுக்கோப்பான ஒரு முறையில் ஆட்சியை நடத்தமுடியாமலும் போனது.

அமைச்சர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற அக்கறையின் விளைவாக அமைச்சரவையில் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கு குறைந்தளவு முன்னுரிமையை அரசாங்கம் கொடுத்துவிட்டது போன்று தெரிகிறது.

குறிப்பாக, அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் ஒருவர் இல்லாத குறைபாடு முக்கியமாக சுட்டிக் காட்டப்படுகிறது.

அந்த சமூகத்தவர்கள் மத்தியில் பெரும் கவலை ஏற்பட்டிருக்கிறது. முஸ்லிம் ஒருவர் அமைச்சரவையில் இல்லாமல் போனது இதுவே முதற்தடவை என்று அவர்கள் குறிப்பாக சுட்டிக்காட்டுகிறார்கள். அமைச்சரவையில் இரு தமிழர்கள் இருக்கின்ற போதிலும் கூட, அவர்களும் வடக்கு, கிழக்கிற்கு வெளியில் உள்ளவர்களாகவே இருக்கிறார்கள்.

பாராளுமன்ற தேர்தலில் தமிழர்களும் முஸ்லிம்களும் பெரும்பான்மையாக வாழ்கின்ற வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பாகங்களிலும் தேசிய மக்கள் சக்தி பெருவெற்றி பெற்றிருக்கிறது.

வடக்கில் யாழ்ப்பாணத்திலும் அது வெற்றி பெற்றிருக்கிறது. தேசியக் கட்சி ஒன்று இத்தகைய வெற்றியை பெற்றிருப்பது இதுவே முதற்தடவையாகும். சகல இனங்களையும் மதங்களையும் சேர்ந்த மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

அதனால் அரசாங்கத்தின் எதிர்காலப் பாதை குறித்து மிகவும் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படுகின்ற அமைச்சரவையில் அந்த சமூகங்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யவேண்டியது இன்றியமையாததாகும்.

இலங்கையின் பன்முக சமூகத்தில், சகல சமூகங்களினதும் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டியது முக்கியமானதாகும். அவ்வாறு அமைந்தால் தான் அந்த சமூகங்களின் தேவைகளையும் அபிலாசைகளையும் அவர்களால் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடியதாக இருக்கும்.

இலங்கை்கான புதிதொரு பாதையை வகுப்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கொண்டிருக்கிறது. அது சகல சமூகங்களையும் அரவணைத்து அவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தி பொருளாதார தேவைகளில் ஒரு சமநிலையைப் பேணக்கூடிய பாதையாக அமையவேண்டும்.

இந்த சவால்களுக்கு அரசாங்கம் தன்முனைப்புடன் முகங்கொடுப்பதன் மூலமாக பெருமளவுக்கு ஒப்புரவானதும் கட்டுக்கோப்பானதுமான ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைக்கக்கூடியதாக இருக்கும்.

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...