இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் போடப்பட்டிருந்த போதிலும், தெற்கு காசா பகுதியில் உள்ள மத்திய ரஃபாவில் திங்கட்கிழமை ஒரு இஸ்ரேலிய வீரர் பலஸ்தீனிய குழந்தையை சுட்டுக் கொன்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அல்-அவ்தா சதுக்கத்திற்கு அருகில் இஸ்ரேலிய படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஜகாரியா ஹமீத் யஹ்யா பர்பாக் என்ற 10 வயது குழந்தை உயிரிழந்தது. ஜகாரியாவின் உடலை மீட்க முயன்ற மற்றொருவர் காயமடைந்துள்ளார் என்று பலஸ்தீன ஊடகங்கள் தெரிவித்தன.
காசாவின் ரஃபாவில் தொடங்கிய போர்நிறுத்தத்திற்குப் பின்னர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 137 உடல்களின் பட்டியல் நாளுக்குநாள் நீளுகிறது. மேலும், கான்கிரீட்டின் அடியில் 10,000 உடல்கள் புதைந்திருக்கலாம் என பலஸ்தீன சிவில் பாதுகாப்பு அமைப்பு கருதுகிறது.
போர்நிறுத்தத்தை மீறி நடந்த இஸ்ரேலிய ஷெல் தாக்குதலில், மூன்று பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதோடு, எட்டு பேர் காயமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அக்டோபர் 7, 2023 முதல் இன்று வரை காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் 47,035 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருக்க, 111,091 பேர் படுகாயமடைந்துள்ளனர்.