அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அவர்களுக்குமிடையே விசேட சந்திப்பு நேற்று (10) இடம்பெற்றது.
வெளியுறவு அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் சார்பாக அதன் பொதுச் செயலாளர் அஷ்-ஷேக் அர்கம் நூராமித் உட்பட செயற்குழு உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
ஜம்இய்யாவின் பொதுச்செயலாளர் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித் ஜம்இய்யதுல் உலமா பற்றிய அறிமுகத்தை வழங்கியதுடன் இலங்கையர்களை நல்லிணக்கத்துடனும் சகவாழ்வுடனும் வாழ ஜம்இய்யா வழிகாட்டுவதையும் விளக்கியதோடு நாட்டில் முஸ்லிம்களின் மத, கலாசார மற்றும் மனித உரிமைகள் குறித்து இதுவரை தேசிய அளவில் உலமா சபை மேற்கொண்டு வரும் பணிகள் குறித்தும் அமைச்சருக்கு விளக்கம் தரப்பட்டது.
இந் நிகழ்வில் உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், கலந்துரையாடப்பட்ட சில விடயங்கள் தொடர்பாக, மத பாகுபாடு இல்லாமல், அவர்களின் அதிகார வரம்பிற்குள் தேவையான வசதிகளை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிப்பதாகத் தெரிவித்தார்.
இச்சந்திப்பின் இறுதியில், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினால் வெளியிடப்பட்ட அல்குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பு பிரதியொன்றும் வெளிவிவகார அமைச்சருக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.