கடந்த நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வென்ற ட்ரம்ப் , அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றார்.
78 வயதான குடியரசுக் கட்சித் தலைவருக்கு அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் அமெரிக்காவின் கேபிடல் ரோட்டுண்டாவில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் முதன்முறையாக ஜனாதிபதி பதவி ஏற்பு விழா உள்ளரங்கில் நடைபெற்றது.
அமெரிக்காவில் தற்போது கடுமையான பனிக்காலம் என்பதால் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கும் நிகழ்ச்சி ரோட்டுண்டா உள்ளரங்கத்தில் நடைபெற்றது. இதற்கு முன்பு 1985 ஆம் ஆண்டு ரொனால்ட் ரீகன் ஜனாதிபதியாக பதவியேற்ற நிகழ்வு உள்ளரங்கில் நடைபெற்றது.
அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்கு முன்னர் தன்னுடைய ஆதரவாளர்கள் மத்தியில் வெற்றி பேரணி நடத்திய முதல் ஜனாதிபதி என்ற பெருமை ட்ரம்ப்க்கு கிடைத்திருக்கிறது . பொதுவாக அமெரிக்கா ஜனாதிபதியாக பதவி ஏற்கும் நபர்கள் பதவியேற்ற பிறகு பேசக்கூடிய உரை மிக முக்கியமானதாக கருதப்படும்.
எனவே அது வரை அவர்கள் மௌனம் காப்பார்கள். ஆனால் அந்த பாரம்பரியத்தை உடைத்து பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு முன்னதாகவே ட்ரம்ப் ஆதரவாளர்கள் மத்தியில் பிரம்மாண்ட பேரணி நடத்தி இருக்கிறார்.
டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பு நிகழ்ச்சிக்காக வெளிநாட்டு தலைவர்களை அழைத்து இருக்கிறார். பொதுவாக பாதுகாப்பு காரணங்கள் கருதி அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியில் வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்க மாட்டார்கள்.
ஆனால் அந்த பாரம்பரியத்தை உடைத்திருக்கும் ட்ரம்ப் சீன ஜனாதிபதி ஜின்பிங் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களை அழைத்து இருக்கிறார். அதேபோல இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் சீனா சார்பாக துணை ஜனாதிபதி கலந்து கொண்டிருக்கிறார்.
அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியில் முதன்முறையாக சீனாவில் உயர் பதவியில் இருக்கும் நபர் கலந்து கொள்வது இதுவே முதன் முறையாகும்.