புத்தளம் ஜம்இய்யதுல் உலமா நகரக் கிளை, புத்தளம் நகரசபை, புத்தளம் பெரிய பள்ளிவாசல், புத்தளம் வர்த்தக சங்கம், மற்றும் பல சிவில் அமைப்புக்கள் இணைந்து புத்தளம் மன்னார் வீதியில் அமைந்துள்ள மருத்துவ நிலையத்தில் முழுநாள் நிகழ்ச்சியாக இடம்பெற்ற இரத்ததான முகாம் உலமா சபை நகரக்கிளை சபைத் தலைவர் அஷ்ஷெய்க் ஜிப்னாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
‘உதிரம் கொடுப்போம்- உயிர் காப்போம்’ என்ற தொனிப்பொருளில் முழுநாள் நிகழ்வாக இடம்பெற்ற இந்நிகழ்வில் சுமார் 140 பேர் வரை தங்களுடைய இரத்தங்களை பிறர் நலன் பேணுவதற்காக வழங்க முன்வந்திருந்தார்கள்.
இந்நிகழ்வில் சிறப்பம்சம் யாதெனில் சுமார் 50 உலமாக்கள் கலந்துகொண்டு இந்நிகழ்வை சிறப்பித்ததுடன் ஏனையோருக்கு முன்மாதிரியாக அமையும் வகையில் அவர்களும் இரத்ததானம் வழங்கி மனிதாபிமான பணியை வழங்கியிருந்தமை அனைவரையும் கவர்ந்த விடயமாக அமைந்திருந்தது.
இந்நிகழ்வை இன்னும் சிறப்பிக்கும் முகமாக புத்தளம் மாவட்ட நான்கு சர்வ மதத் தலைவர்களும் கலந்துகொண்டதோடு தங்களுடைய ஆசிர்வாதங்களையும் இந்த சிறப்பான நிகழ்ச்சிக்கு வழங்கினர்.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசல் அவர்களும் இந்நிகழ்வில் சிறப்பதிதியாக கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட முக்கியஸ்தர்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நகரக்கிளையினால் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.