தனித்துவங்கள், வேறுபாடுகள் இருந்த போதிலும் அனைவரும் நாட்டின் பிரஜைகள்; சகலரது உரிமைகளும் பாதுகாக்கப்படும்: உலமா சபை சந்திப்பில் பிரதமர் உறுதி

Date:

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கும் பிரதமர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களுக்குமிடையிலான விஷேட சந்திப்பொன்று நேற்று (16) பிரதமர் காரியாலயத்தில் நடைபெற்றது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் பொதுச் செயலாளர், உதவிப்பொதுச் செயலாளர், உப குழுக்களின் செயலாளர்கள், உறுப்பினர்கள் சிலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த சந்திப்பில், ஜம்இய்யாவின் வரலாறு மற்றும் கடந்த காலப் பணிகள் குறித்த அறிமுகம் வழங்கப்பட்டதுடன், அனைத்து இலங்கையர்களும் ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்வதற்கான வழிகாட்டுதல்களை ஜம்இய்யா எப்போதும் வழங்கி வருவதும் தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும், ஆலிம்கள் இந்நாட்டிற்கு ஆற்றியுள்ள சேவைகள் குறித்த விளக்கங்கள் பிரதமர் அவர்களுக்கு வழங்கப்பட்டதுடன் கல்வி ரீதியாக முஸ்லிம்கள் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள், அரபுக் கல்லூரிகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் இஸ்லாம் பாட மௌலவி ஆசிரியர் நியமனத்தில் நிலவும் சிக்கல்கள் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்தும் தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டது.

இதனையடுத்து  பிரதமர் அவர்கள், தனது அதிகாரத்தின் கீழ் எல்லோருக்கும் பொதுவான, சமமான முறையில் கல்வி கற்கக்கூடிய சூழல் உருவாக்கப்படும் என தெரிவித்ததோடு அதற்கு முஸ்லிம் சமுதாயத்தின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் தனித்துவங்கள், வேறுபாடுகள் இருந்த போதிலும் அனைவரும் நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் சகலரது உரிமைகளும் பேணிப் பாதுகாக்கப்படும் சூழல் நாட்டில் உருவாக்கப்பட வேண்டியதை வலியுறுத்திய பிரதமர் அவர்கள் அதற்கும் முஸ்லிம் சமூகத்தின் ஒத்துழைப்பு அவசியம் என்று கருத்துத் தெரிவித்தார்.

அத்தோடு இவ்விடயம் தொடர்பில் ஜம்இய்யாவுடன் ஆரோக்கியமான தொடர் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு தான் எதிர்பார்ப்பதாகவும் இதன்போது பிரதமர் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் இறுதியில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையால் வெளியிடப்பட்ட அல்-குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு மற்றும் மேலும் சில வெளியீடுகளும் பிரதமர் அவர்களுக்கு கையளிக்கப்பட்டன.

இதில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், உதவிப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம், ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம். பாஸில் பாறூக், ஊடகக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன், ஆகியோருடன் செயலக நிர்வாகி அஷ்-ஷைக் டி. நுஃமான் அவர்களும் கலந்துகொண்டனர்.

 

Popular

More like this
Related

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 14 புதிய செக்-இன் கவுண்டர்கள் திறந்து வைப்பு

கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட...

பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகலில் மழை

எதிர்வரும் சில நாட்களில் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் மழையுடனான நிலை...

ஜூம்ஆவுடைய நேரத்தை சுருக்கிக் கொள்வது தொடர்பாக முஸ்லிம் சமய திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தல்.

கா.பொ.த.சாதாரண தர பரீட்சை நடைபெற்று வருவதால்  நவம்பர் 14ஆம், 21ஆம், 28ஆம்...

இந்தியா மற்றும் பாகிஸ்தான் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் இலங்கைக்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக இலங்கைக்கு எந்தவிதமான பாதுகாப்பு...