யாழ்ப்பாணம் – வீமன்காமம் மற்றும் நடேஸ்வரா கல்லூரிகளில் தனது ஆரம்ப கல்வியை தொடர்ந்து மாவை சேனாதிராஜா, இலங்கை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பை நிறைவு செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து, தனது நேரடி அரசியல் வாழ்க்கையை மாவை சேனாதிராஜா ஆரம்பித்துள்ளார்.
மாவை சேனாதிராஜா தனது நேரடி அரசியல் வாழ்க்கையை 1960ம் ஆண்டு காலப் பகுதியில் ஆரம்பித்திருந்தார்.இலங்கை தமிழ் தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் 1961ம் ஆண்டு நடைபெற்ற சத்தியாகிரக போராட்டத்தில் இணைந்துக்கொண்டதன் ஊடாக, தனது போராட்ட மற்றும் அரசியல் வாழ்க்கையை அவர் ஆரம்பித்திருந்தார்.
இதையடுத்து, இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் 1962ம் ஆண்டு மாவை சேனாதிராஜா இணைந்துகொண்டார்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணியில் இணைந்துகொண்டதன் ஊடாக, அவர் மக்களுக்கான போராட்டங்களை நடத்தியிருந்தார். ஈழத் தமிழர் இளைஞர் இயக்கத்தில் 1966ம் ஆண்டு இணைந்த அவர், 1969ம் ஆண்டு வரை அதன் செயலாளராக கடமையாற்றியுள்ளார்.
இதையடுத்து, மாவை சேனாதிராஜா இலங்கை அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டதுடன், சுமார் 7 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துள்ளதாக பதிவுகள் தெரிவிக்கின்றன.
சிறையிலிருந்து வெளியில் வந்த மாவை சேனாதிராஜா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவையின் செயலாளராக நியமிக்கப்பட்டு செயற்பட்டுள்ளார்.
மாவை சேனாதிராஜா, முதல் தடவையாக 1989ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட போதிலும், அவர் தோல்வியை தழுவியிருந்தார்
எனினும், அதே ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் அ.அமிர்தலிங்கம் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு மாவை சேனாதிராஜா தெரிவு செய்யப்பட்டதுடன், அதுவே அவரது முதலாவது நாடாளுமன்ற பிரவேசமாகும்.
அதனைத் தொடர்ந்து, 1999ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்டமையினால் ஏற்பட்ட நாடாளுமன்ற வெற்றிடத்துக்கு மீண்டும் மாவை சேனாதிராஜா தெரிவானார்.
தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் 2000ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு, யாழ். மாவட்டத்தில் வெற்றி பெற்றதன் ஊடாக அவர் நாடாளுமன்ற பிரவேசத்தைப் பெற்றார்.
அதன்பின்னர், 2001ம் ஆண்டு பல தமிழ் கட்சிகள் இணைந்து ஆரம்பித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்துகொண்ட மாவை சேனாதிராஜா, தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அதன் பின்னரான அனைத்துத் தேர்தல்களிலும்போட்டியிட்டிருந்தார்.
2001, 2004, 2010 மற்றும் 2015ம் ஆண்டு தேர்தல்களில் வெற்றியீட்டிய மாவை சேனாதிராஜா, தொடர்ந்து நாடாளுமன்ற பிரவேசத்தைப் பெற்ற நிலையில், 2020ம் ஆண்டு தேர்தலில் தோல்வியை அடைந்திருந்தார்.
2024ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மாவை சேனாதிராஜா போட்டியிடவில்லை.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக 2014ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட மாவை சேனாதிராஜா, 2024ம் ஆண்டு வரை அதன் தலைவராக செயல்பட்டார்.
இலங்கை தமிழர்களின் பிரச்னைக்காக அரசியல் களத்தில் அகிம்சை போராட்டங்கள் ரீதியிலும், நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய முக்கிய தலைவராக மாவை சேனாதிராஜா விளங்கினார்.
உள்நாட்டில் மாத்திரமன்றி, சர்வதேச ரீதியிலும் மாவை சேனாதிராஜா, தமிழர்களின் விடுதலைக்காக குரல் எழுப்பிய முக்கிய தலைவராவார்.
இந்தநிலையிலேயே, மாவை சேனாதிராஜா நேற்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.