திபெத் எல்லையில் நிலநடுக்கத்தால் 53 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
திபெத் – நேபாள எல்லை அருகே ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவான நிலையில், உயிரிழப்பு குறித்து தகவல் வெளியாகி வருகின்றன.
நேபாள எல்லைக்கு அருகே உள்ள திபெத்தின் ஜிசாங் பகுதியில் இன்று காலை 6:35 மணியளவில் ரிக்டர் அளவில் 7.1 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
இதன் தாக்கம் அண்டை நாடான நேபாளம் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டதுடன், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
மொத்தம் நான்கு முறை ஜிசாங் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அதன்படி, முதலாவதாக காலை 5:41 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆகவும், இரண்டாவதாக காலை 6:35 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகவும், மூன்றாவதாக காலை 7:02 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆகவும், நான்காவதாக காலை 7:07 மணிக்கு 4.9 ஆகவும் பதிவானது தெரியவந்தது.
திபெத்தின் புனித நகரங்களில் ஒன்றாக ஷிகாட்சே கருதப்படுகிறது. இது திபெத்திய புத்த மதத்தின் முக்கிய நபரான பஞ்சன் லாமாவின் பாரம்பரிய இடமாகும். அவரது ஆன்மீக அதிகாரம் தலாய் லாமாவுக்கு அடுத்தபடியாக உள்ளது
நிலநடுக்கத்திற்குப் பிறகு கட்டடங்கள் இடிந்து விழும் படங்களும் காணொளிகளும் சமூக ஊடகப் பதிவுகளில் வெளியாகியுள்ளன.
சீனா பூகம்ப வலையமைப்பு மையத்தின் ஆராய்ச்சியாளர் ஜியாங் ஹைகுன் சீனா சீன ஊடகமான சிசிடிவியிடம், “ஒரு பெரிய நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏற்படும் சிறிய அதிர்வுகளின் வலிமை மற்றும் நடுக்கம் படிப்படியாக குறையும்” என்று கூறினார்.
5 என்ற அளவிலான மற்றொரு நிலநடுக்கம் இன்னும் நிகழக்கூடும் என்றாலும், “பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது”என்று ஜியாங் கூறினார்.
நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள இப்பகுதி, எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. உறைபனிக்குக் கீழே வெப்பநிலை உள்ள இப்பகுதியில், சீன விமானப்படை மீட்புப் பணிகளைத் தொடங்கியுள்ளது மற்றும் ஆளில்லா விமானங்களையும் அனுப்பியுள்ளது.
அப்பகுதியில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இரண்டும் துண்டிக்கப்பட்டுள்ளன.