இலங்கையில் உள்ள மியன்மார் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் ஜெனரல் சாவ் மோ எல்வின், நேற்று (28) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, இரு அதிகாரிகளும் பரஸ்பர ஆர்வமுள்ள விஷயங்கள் குறித்து சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
மேலும் இலங்கைக்கும் மியன்மாருக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளையும் ஆராய்ந்தனர்.
கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு பயிற்சித் திட்டங்கள் போன்ற துறைகளில் ஒத்துழைப்பது தொடர்பில் குறிப்பாக கவனம் செலுத்தப்பட்டதோடு , இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பிலும் இந்த கலந்துரையாடலில் வலியுறுத்தபட்டது.
இந்த முக்கிய துறைகளில் கூட்டாகச் செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகளை பிரிகேடியர் ஜெனரல் எல்வின் எடுத்துரைத்தார், இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலுப்படுத்துவதாக இந்தச் சந்திப்பு அமைந்திருந்ததாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லெண்ணம் மற்றும் பரஸ்பர மரியாதையின் அடையாளமாக நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டன.
பாதுகாப்பு அமைச்சின் இராணுவ தொடர்பு அதிகாரியும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
மியன்மாரில் இருந்து ரோஹிங்கியர்கள் இலங்கையில் தஞ்சமடைந்துள்ள நிலையில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. மேலும் ஓரிலட்சம் ரோஹிங்கியர்கள் இலங்கை வரவிருப்பதாக புலனாய்வுத் தகவல் கிடைத்திருப்பதாக முன்னதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.