புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் 2025 ஆம் வருடத்திற்கான 5வது பட்டமளிப்பு விழா, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 14 ஆம் திகதி பிற்பகல் 1.30 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கல்லூரியின் 13 அணிகளைச் சேர்ந்த சுமார் 350 மாணவியர்கள் பட்டங்களை பெற இருக்கும் இப் பட்டமளிப்பு விழாவில், தென்கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபா பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார்.
கௌரவ அதிதிகளாக மலேசியா இஸ்லாம் மெலாகா (Melaka) பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் டாடுக் ஹாஜ் மொஹமட் டைப் மற்றும் அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்வி மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதி வேந்தர் கலாநிதி அனஸ் பின் தாஜுதீன் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
மேலும், கொழும்பு பல்கலைக்கழக புவியியல் துறை பீடாதிபதி பேராசிரியர் பரீனா ருஸைக் மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை மற்றும் கலாசார பீடத்தின் மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ராஹிலா ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்துகொள்வர்.
பட்டமளிப்பு விழாவுக்கான பிரதான உரையினை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் முதல்வர் அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத் நிகழ்த்துவார்.
இலங்கையின் முன்னோடி இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி, 1989களில் ஆரம்பிக்கப்பட்டு, இதுவரை தேசிய ரீதியில் பல்வேறு தளங்களில் பங்களிப்பு செய்யும் சுமார் 700 பெண் ஆளுமைகளை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.