மனித வாழ்வில் மத நம்பிக்கை அவசியமானதா?

Date:

-மௌலானா வாஹிதுத்தீன் கான்

மதம் என்றால் என்ன? மதத்தின் அடிப்படை ஆன்மீகம் ஆகும். அதாவது மதம் என்பது ஆன்மீக அறிவியலின் மற்றொரு பெயர் ஆகும். ஏனைய கலைகள் மற்றும் அறிவியல்கள் வெளிப்புற இயல்புடையவை ஆவதோடு மதம் என்பது மனிதனின் உட்புறம் தொடர்பானதொரு விடயமாகும்.

மனிதனுக்கு இரு வகையான அம்சங்கள் உள்ளன. அவை உடல் மற்றும் ஆன்மாவாகும். இரண்டிற்கும் தமது நிலைத்திருத்தலுக்காக ஆதாரங்கள் தேவைப்படுகின்றன.

உதாரணமாக, உடலின் நீடிப்பிற்கு உணவு மற்றும் தண்ணீர் தேவைப்படுகின்றன. ஒருவருக்கு குறிப்பிட்ட நீண்ட காலம் உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காவிட்டால் அவர் உடல் நலிவடைந்து இறுதியில் அவர் மரணித்து விடுவார்.

அதே போன்று, ஆன்மா மரணிக்கமாமல் வாழ்வதற்கும் சில அம்சங்கள் தேவைப்படுகின்றன. அவற்றை ஆன்மா பெறா விட்டால் ஆன்மாவும் மரணித்து விடும். ஆன்மாவின் உணவாக மதத்தை, அதாவது வணக்க வழிபாடுகள் மற்றும் நற்குணங்களைக் குறிப்பிடலாம்.

மதம் என்பது சத்தியத்தின் பிரதிபலிப்பாகும். ஒருவன் பணக்காரராக இருந்தாலும் சரி, ஏழையாக இருந்தாலும் சரி, செல்வாக்கு உள்ளவனாக அல்லது இல்லாதவனாக இருந்தாலும் சரி, பலமுள்ளவனாக அல்லது பலவீனனாக இருந்தாலும் சரி அவ்வனைவருக்கும் மதம் அத்தியாவசியமாகின்றது.

மனிதனின் வாழ்க்கைக்கு ஒரு தொடக்கப் புள்ளியை தருவது மத நம்பிக்கையே. மதத்தை இழந்த ஒருவன் தனது வாழ்க்கையின் தொடக்கப் புள்ளியையும் இழக்க நேரிடும்.

‘நான் யார்?’ என்ற கேள்விக்கான பதில் சத்திய மதமாகும். மதம் மனிதனுக்கு படைப்பின் ரகசியத்தைச் தெளிவுபடுத்துகின்றது.

அது மனிதனுக்கு வாழ்க்கையின் தத்துவத்தை கற்பிக்கின்றது. மதம் வாழ்க்கையின் வழிகாட்டி நூலாகும். மனிதனை அறியாமையின் இருளிலிருந்து வெளியே கொண்டு வந்து, யதார்த்தத்தின் வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்வது மதமே.

மதம் மனிதனை ஒரு நல்ல குடிமகனாக ஆக்குகின்றது. மேலும் அது மனிதனை உண்மையை நேசிப்பவனாக சமூகத்தில் வாழ உதவும் ஒரு ஒழுக்க நெறியை கற்றுத் தருகின்றது.

அத்துடன் மதமானது மனிதனை மற்றவர்களுக்கு தொல்லை தராதவனாக மாற்றுகிறது. அது மனிதனை வெறுமனே ‘வாங்குபவனாக’ இல்லாமல் ‘கொடுப்பவனாக’ ஆக்குகிறது.

மனிதனின் சிரமமான காலங்களில் மதமே அவனது துணையாக நிற்கின்றது. மேலும் மதமானது நெருக்கடிகளை நிர்வகிக்கும் கலையாகும். அது மனிதனை நெருக்கடிக்கு பலியாவதிலிருந்து காப்பாற்றி நெருக்கடியில் இருந்து பாடம் கற்கச் செய்கின்றது.

மதம் அறிவுசார் ஆரோக்கியத்தின் அடையாளமாகும். எதிர்மறை அனுபவங்களை நேர்மறையான முடிவுகளாக மாற்றவும்; தனது பலவீனங்களை பலமாக மாற்றவும்; முட்களை பூக்களின் வடிவத்தில் பார்க்கவும்; எதிரியை நண்பனாக மாற்றவும் மதம் துணை புரிகின்ற.

மதம் என்பது வெறுமனே சில பல சடங்குகள் அல்ல. அதே போன்று ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்த குடும்பத்தில் பிறப்பதால் ஒருவர் மத நம்பிக்கை உள்ளவர் என கருதப்பட மாட்டார்.

உண்மையான மத நம்பிக்கை ஒருவரின் உள்ளத்தில் அடித்தளத்தில் உருவாவதாகும். அவை வெளிப்புற அனைத்தையும் விட மேலானதாகும்.

மதம் மனிதனின் சிந்தனையை நெறிப்படுத்துகின்றது. சாதாரண கண்களால் காண முடியாதவற்றைக் காண மதம் மனிதனுக்கு உதவுகின்றது.

மேலும் கடந்த காலத்தில் இருந்து பாடம் கற்று எதிர்காலத்தை ஊகிக்க அது துணை புறிகின்றது. மிருக ராஜ்ஜியத்தை சேரந்த ஒரு உயிரினமாக மனிதனை ஒரு மகாத்மாவாக மாற்றுவது மதமே.

நமது உலகத்திற்கு இரண்டு பகுதிகள் உள்ளன. ஒன்று காணக்கூடிய உலகமாவதோடு மற்றொன்று கண்ணுக்குத் தெரியாத உலகமாகும். காணக்கூடிய உலகத்தை கடலில் தோன்றும் ஒரு பனிப்பாறையின் கடலுக்கு மேலே தெரியும் சிறிய பகுதிக்கு ஒப்பிடலாம்.

அதன் பெரும்பகுதி கண்களுக்கு மறைவாக, சமுத்திரத்தில் மூழ்கி இருக்கின்றது. மதம் மனிதனுக்கு வாழ்வின் இந்தப் பனிப்பாறையின் பெரும்பகுதியைக் காண உதவுகிறது,வாழ்க்கையில் மனிதன், அவன் எவ்வளவு பணம், பலம், செல்வாக்கு உள்ளவனாக இருந்த போதிலும், நிற்கதியாகும் சந்தர்ப்பங்களை நாம் அடிக்கடி காண்கிறோம்.

ஏன், அது போன்ற நிலைகள் எமது வாழ்விலும் ஏற்பட்டிருக்கலாம். அனைத்தையும் இழந்து விட்ட நிலைக்கு தள்ளப்பட்டாலும் மத நம்பிக்கை ஒரு மனிதனுக்கு மீண்டும் நம்பிக்கையை தரும். அதாவது, மதம் அவனுக்கு அவனது மீட்பாளராகத் காட்சியளித்து நிம்மதியையும் தைரியத்தையும் வழங்கும்.

ஒரு சத்திய மதமானது அனைத்து நலவுகளினதும் ஊற்றாகும். சத்திய மதம் மனிதனுக்கு தனக்கு அநீதி இழைத்தவனையும் மன்னிக்கும் மனப்பக்குவத்தை அளிக்கிறது.

மேலும், உலக வாழ்வு நிரந்தரமல்ல என மதம் வலியுறுத்துவதால், பேராசை, பொறாமை போன்ற உணர்வுகள் அவனுக்கு எல்லை மீறி ஏற்படுவதில்லை. அவன் மக்களின் குறைகளை சகிப்பதோடு எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரையும் மதித்து நடப்பான்.

மேலும் அவன் அநீதி செய்வதிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதோடு எப்போதும் நீதியின் பாதையிலேயே நடப்பான். தனது எதிரிகளைக் கூட நீதியுடனும் நியாயத்துடனும் நடத்துவதோடு சமூகத்தில் இருந்து உதவி பெறுபவனாக இன்றி சமூகத்திற்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்பவனாக அவன் இருப்பான்.

சத்திய மதம் ஒருவரை கொள்கை பேணுபவனான ஆக்குகின்றது. அது அவனில் சுயக்கட்டுப்பாடு மற்றும் சுய ஒழுக்கத்தை வளர்க்கிறது. மத நம்பிக்கை உள்ள ஒருவனின் நடவடிக்கைகளை எவரும் எளிதான கணித்து விடலாம்.

அதாவது அவன் எவரும் அதிர்ச்சி அல்லது வியப்படையக்கூடிய செயல்களை மேற்கொள்ள மாட்டான்.

மத நம்பிக்கை உள்ள ஒருவன் வாழ்வை விளையாட்டாக எடுக்காது சகல விடயங்களிலும் பொறுப்புணர்ச்சி உள்ளவனாகவே காணப்படுவான். மேலும் அவன் எப்போதும் தன்னை மதிப்பீடு செய்பவனாக இருப்பதால் தனக்குள் ஒரு சுய-திருத்த பொறிமுறையை வளர்த்துக் கொள்வான்.

மனிதனுக்குள் இது போன்ற உன்னத குணங்களை மதம் எவ்வாறு உருவாக்குகின்றது?
மதத்தின் ஒரு முணை இறைவனுடன் இணைக்கப்பட்டுள்ளதாலேயே இது சாத்தியமாகின்றது.

மேலும், இறைவனே அனைத்து நன்மைகளின் மூலமாக இருக்கின்றான்;. எனவே மத நம்பிக்கை உள்ளவரும் அனைத்து நன்மைகளுக்கும் ஆதாரமாக இருக்கிறார். சத்திய மதம் ஒருவரை இறைவனை சார்ந்தவராக ஆக்குகின்றது. அது இறைவன் சார்ந்த சிந்தனைகளை தருகின்றது.

மத நம்பிக்கை உள்ள ஒரு மனிதனின் வாழ்க்கை இறைவனை சார்ந்த வாழ்க்கையாக இருப்பதால் அவரை வெல்ல எவராலும் முடியாது.

மத நம்பிக்கை உள்ள ஒருவர் இறைவனுடன் நெருக்கத்தை வளர்த்துக் கொள்கிறார், அத்தகைய நபர் சூரியன், சந்திரன், மலைகள் மற்றும் கடல்களை விட மிகவும் சக்திவாய்ந்தவராக மாறுகிறார்.

இறை நம்பிக்கை உள்ள ஒருவன் எதற்கும் கலங்காதவனாக ஆவது எப்படி என்பதை விளக்கும் ஒரு குட்டிக் கதை கீழே தரப்பட்டுள்ளது.

அமெரிக்க கடற்கரையிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு ஒரு கப்பல் பயணித்தது. அது அட்லாண்டிக் பெருங்கடலில் நுழைந்த போது ஒரு கடுமையான புயலால் தாக்கப்பட்டு படு பயங்கரமாக கடலில் தத்தளித்தது.

மேலும் கீழும் வலதும் இடதுமாக இராட்சத அலைகளால் அக்கப்பல் பந்தாடப்பட்டது. பயணிகள் அனைவரும் மரண பீதியால் பீடிக்கப்பட்டனர். கப்பல் எந்த நேரத்திலும் மூழ்கிவிடலாம் என்று அவர்கள் அஞ்சினர்.

இதன் போது, கப்பலின் ஒரு மூலையில் ஒரு சிறுமி தனது பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருப்பதை ஒரு பயணி கண்டு அச்சிறுமியிடம் சென்று ‘இந்த கப்பலுக்கு என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பது உனக்குத் தெரியாதா?’ என வினவினார். அச்சிறுமியும் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என கேட்டாள்.

‘எங்கள் கப்பல் ஒரு கடும் புயலில் சிக்கிக் கொண்டுள்ளது. எந்நேரத்திலும் இது படலில் மூழ்கி நாம் அனைவரும் மரணித்து விடலாம்’ என அவர் கண்ணீருடன் விவரித்தார். உடனே வாய்விட்டுச் சிரித்த அச்சிறுமி ‘ஒரு போதும் அப்படி எதுவும் நடக்காது.

ஏன் தெரியுமா? என் தந்தையே இந்த கப்பலின் கேப்டன். அவர் உலகின் தலை சிறந்த கேப்டன் ஆவார்’ என கூறி விட்டு தனது பொம்மையுடன் தொடர்ந்து விளையாடலானாள்.

அச்சிறுமியின் அந்த மனோபாவம், ஒரு மத நம்பிக்கை கொண்ட ஒரு நபருக்கான உதாரணமாகும். இறை நம்பிக்கை மற்றும் மத நம்பிக்கை கொண்ட ஒருவர் ஒருபோதும் வாழ்வில் நம்பிக்கை இழக்க மாட்டார்.

நெருக்கடியின் போது அவர் கலங்க மாட்டார். ஒருபோதும் தைரியத்தை இழக்க மாட்டார்.

ஏனெனில், சர்வவல்லமையுள்ள இறைவனே வாழ்க்கை எனும் தனது கப்பலின் கேப்டன் என்பதை அவர் நன்கு அறிவார்.

 

 

 

 

 

 

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...