ரோஹிங்யாக்களை இலங்கைக்கு வர ஊக்குவிப்பார்களா?: வடக்கு செயற்பாட்டாளரிடம் புலனாய்வு பொலிஸார் விசாரணை?

Date:

இலங்கைக்கு அகதிகளாக  வந்த  ரோஹிங்யாக்களை திருப்பி அனுப்பக்கூடாது என வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டத்தை முன்னெடுத்த செயற்பாட்டாளரிடம், “ரோஹிங்கியாக்களை இலங்கைக்கு வர ஊக்குவிப்பார்களா?” என குற்றப் புலனாய்வு திணைக்களம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதன்போது வெகுஜன மக்கள் போராட்டம் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு, பழைய பொலிஸ் தலைமையகக் கட்டிடத்தில் அமைந்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவின் மனிதக் கடத்தல் வியாபாரம் குறித்த விசாரணைப் பிரிவின் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரியிடம் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்ட, வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளர் யாட்சன் ஃபிகிராடோவிடம் சுமார் ஐந்து மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

பொலிஸாரின் கேள்விக்கு பதிலளித்த யாட்சன் ஃபிகிராடோ, அத்தகைய ஊக்குவிப்பை தான் செய்யப்போவது இல்லை என வெளிப்படையாக அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

“ரோஹிங்யா மக்களின் வருகையை நீங்கள் ஊக்குவிக்கின்றீர்களா எனக் கேட்டார்கள். நாங்கள் எங்களுடைய அறிக்கையில் பொது வெளியில் சொல்லியிருக்கின்றோம் அகதிகள் இலங்கையில் இங்கு வந்திருப்பவர்களை இங்கே தொடர்ந்து இருப்பதற்கோ அல்லது தொடர்ந்து இங்கு வருவதற்கோ நாங்கள் எப்போதும் ஊக்குவிக்கவில்லை.

ஆனால் இருப்பவர்களை வந்திருப்பவர்களை மனிதாபிமான அடிப்படையில் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து ஏற்றுக்கொள்ளக்கூடிய நாடுகளுக்கு அவர்களை அனுப்பி வைப்பது பொருத்தமாக அமையும். சர்வதேச சட்ட நியமங்களையும் பின்பற்றக்கூடியதாக இருக்கும் என்பதை வலியுறுத்தி என்னுடைய வாக்குமூலத்தை வழங்கியிருந்தேன்.

முல்லைத்தீவு விமானப்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ரோஹிங்கியாக்களுக்கு என்ன வகையான உதவிகள் வழங்கப்பட்டன? என குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

“எவ்வாறான உதவிகள்? நாங்கள் பெரிதாக உதவிகள் எதுவும் வழங்கவில்லை. ஆனால் மனிதாபிமான அடிப்படையில் நாங்கள் எங்கள் கருத்துக்களை வெளியிட்டோம். எங்களால் இயன்ற சிறு சிறு உதவிகளை நாங்கள் அவர்களுக்கு முன்னெடுத்திருக்கின்றோம்.” என அவர் கூறியுள்ளார்.

முல்லைத்தீவு விமானப்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியாக்கள் குழுவை நாடு கடத்தக்கூடாது என கோரி கடந்த ஜனவரி 9ஆம் திகதி போரால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கொழும்பில் இருந்து முல்லைத்தீவு சென்ற பிரபல மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோவும் கலந்துகொண்டார்.

மியன்மாரில் இருந்து தப்பி வந்த ரோஹிங்கியாக்களை நாட்டிற்கு திருப்பி அனுப்பக் கூடாது எனக் கோரி சிவில் செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் பலர் அடங்கிய குழுவினர் 2025 ஜனவரி 10 வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமைத்தாங்கிய நவ சம சமாஜக் கட்சியுடன் இணைந்த காணாமல் போனோர் தொடர்பிலான விசாரணைக் குழு ஜனாதிபதி செயலகத்தில் கடிதம் ஒன்றையும் கையளித்திருந்தது.

ரோஹிங்கியாக்களை நாட்டிற்கு திருப்பி அனுப்பக் கூடாது எனக் கோரி பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தன்னை மாத்திரம் விசாரணைக்கு அழைத்தமைக்கான காரணம் தொடர்பில் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதாக யாட்சன் ஃபிகிராடோ கொழும்பில் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

“பல்வேறு நபர்கள் வந்து இதுத் தொடர்பில் ஆர்ப்பாட்டங்களை செய்துள்ளனர். அவர்களுக்கு ஏன் அழைப்பாணை வரவில்லை. முல்லைத்தீவில் இடம்பெற்ற போராட்டத்தில் நானும் இருந்தேன். ஆகவே எனக்கு மாத்திரம் வந்தது தொடர்பில் அவர்களிடம் கேள்வி எழுப்பினேன். ஏன் மற்றவர்களுக்கு வரவில்லை? எதிர்க்கட்சி தலைவர் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டார், கொழும்பில் போராட்டம் செய்திருக்கின்றார்கள்.”

அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகத்தினரினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் தொடர்பிலான விசாரணைகள் தொடர்பிலேயே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சிவில் சமூகத்தை விசாரணைக்கு உட்படுத்துவது மோசமான போக்கு என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளர் யாட்சன் பிகிராடோ ஊடகவியலாளர்களிடம் சுட்டிக்காட்டுகின்றார்.

 

 

 

 

 

 

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...