ஈரானில் தெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் விமான நிலையத்தில், ஒரு ஈரானிய பெண்ணிடம் ஹிஜாப் அணியுமாறு கேட்டுக்கொண்ட மதகுருவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவ்விடத்தில் ஆவேசமான சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது.
குறித்த பெண், மதகுருவின் தலைப்பாகையை கழற்றி தனது தலைக்கு முக்காடாக அணிந்து அவரின் கட்டாயக் கோரிக்கைக்கு எதிராக தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
ஹிஜாப் என்பது இஸ்லாமிய பெண்களுக்கு கட்டாயப்படுத்தப்பட்ட ஆடை. ஆனால் அதனை பலாத்காரமாக கட்டாயப்படுத்தி திணிப்பதால் நடைமுறைப்படுத்த முடியாது என்பதற்கு இச்சம்பவம் ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
ஈரானில் பெண்கள் கீழ்ப்படியாமை அதிகரித்து வரும் சூழலில், குறிப்பாக செப்டம்பர் 2022 இல் ஹிஜாப் அணியவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ் பொலிஸ் காவலில் மஹ்சா அமினி என்ற பெண் இறந்ததைத் தொடர்ந்து இது மாதிரியான சம்பவங்கள் இடம்பெறுகின்றன. விமான நிலையங்கள் உட்பட பொது இடங்களில் கட்டாய ஹிஜாபை மீறும் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளும் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.