நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் 11 மாவட்டங்களில் 5,738 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 16,930 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால், ஒருவர் உயிரிழந்ததுடன், மூன்று பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (20) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
71 குடும்பங்களைச் சேர்ந்த 239 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மொத்தம் 98 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளது.
இதேவேளை,வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சுமார் 75 மி.மீ. அளவுக்கு பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.