காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து நெதன்யாகுவின் அரசாங்கத்திலிருந்து இராஜினாமா செய்வதாக இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் அறிவித்துள்ளார்.
மேலும், நெதன்யாகு பிரதமராக தொடர்வதை தான் உறுதி செய்வதாகவும் ஆனால் கையெழுத்திட்ட ஒப்பந்தம் பேரழிவு தரக்கூடியது அதனால் பதவியிலிருந்து வெளியேறுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் காசா பகுதியில் போர் நிறுத்தத்துக்கும் ஒரு முக்கியமான படியாகும்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஹமாஸ் அடுத்த ஆறு வாரங்களில் 33 பணயக்கைதிகளை விடுவிக்கும், அதே நேரத்தில் நூற்றுக்கணக்கான பலஸ்தீனிய கைதிகள் இஸ்ரேலால் விடுவிக்கப்படுவார்கள்.
இந்த ஒப்பந்தம் இரண்டு கட்டங்களாக இருக்கும், முதல் கட்டத்தில் பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் மற்றும் இரண்டாவது கட்டத்தில் ஆண் வீரர்கள் உட்பட மீதமுள்ள பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கம் உள்நாட்டில் அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறது.
இந்தநிலையில், நெதன்யாகுவின் லிகுட் கட்சியை சேர்ந்த அமைச்சர் அமிச்சாய் சிக்லி, இந்த ஒப்பந்தத்தில் உடன்பாடு இல்லை என தெரிவித்து, பதவி விலகப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும், பெசலெல் ஸ்மோட்ரிச்சின் மத சியோனிசம் கட்சியும் அரசாங்கத்திடம் இருந்து ஆதரவை வாபஸ் பெறுவதாக அச்சுறுத்தியுள்ளது, இது நெதன்யாகு அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். இந்த அரசியல் உறுதியற்ற தன்மை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் தடைகளை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.
பென்-க்விர் அறிவிப்பால், பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி தலைமையிலான கூட்டணியை கடும் சிக்கலில் சிக்க வைத்துள்ளது.